கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சங்க காலம் என்பது கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்று ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தன்னுடைய ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் துறையிடம் சமர்பித்துள்ளார். இதனால், தமிழர்களின் சங்க காலம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 800 ஆண்டுகள் பழமையானது என்பது தெரிய வந்துள்ளது
’கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’ என தமிழர் வரலாறு பழமையானது என்பதை சொல்ல இந்த வரிகளை நாம் பயன்படுத்துவோம். ஆனால், வாய் மொழியாக பல நூறு ஆண்டுகளாக வரலாறு பேசிக்கொண்டிருந்த நம்மையும் அதை நம்ப மறுத்த வட இந்தியர்களையும் வாய் பிளக்க வைத்திருக்கிறது கீழடி அகழாய்வு முடிவுகள்.
கீழடி மூலம் மேலே எழுந்த வரலாறு
சங்க காலம் என்பது கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை என்று இலங்கியங்களை வைத்து கணிக்கப்பட்ட நிலையில், இதனை நிரூபிக்கும் வகையிலான எந்த ஆதாரங்களும் தமிழர்களுக்கு பெரிதாக இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய தொல்லியல் துறை நடத்திய 3 கட்ட ஆய்வுகள் மூலம் தமிழர் நாகரிகம் எவ்வளவு பழமையானது, பண்பட்டது என்பதை நிரூபிக்க நமக்கு பெரிய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அகழாய்வில் ஆதாரங்கள் பெரிதாக கிடைக்கவில்லை என்று கூறி 3ஆம் கட்ட அகழாய்வோடு அந்த ஆராய்ச்சி பணிகளை மத்திய அரசு மூட நினைத்தபோது, தமிழ்நாடே பொங்கி எழுந்தது. அரசியல் கட்சிகள் அத்தனை பேரும் கீழடி அகழாய்வு தொடர்ந்தால், அதில் கிடைக்கும் ஆதாரங்கள் மூலம் தமிழ்தான் இந்தியாவின் மூத்த மொழி என்றும், தமிழர் நாகரிகம்தான் இந்தியாவின் முன்னோடி நாகரிகம் என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணி, அஞ்சி இந்த ஆய்வை மத்திய அரசு மூட நினைகிறது என கூறி போராடினார்கள். ஆனாலும் அதற்கு செவிசாய்க்காத மத்திய அரசு கீழடி அகழாய்வை நிறுத்தி, அதனை தலைமையேற்று நடத்திய தொல்லிய ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனையும் பணியிட மாற்றம் செய்தது.
கையிலெடுத்த தமிழ்நாடு அரசு – வெளியான ஆதாரங்கள்
அதன்பிறகு அன்றைய அதிமுக அரசு தமிழக தொல்லியல் துறை மூலம் 4ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கியது. அன்று தொல்லியல் துறை ஆணையராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் எடுத்த தீவிர முயற்சியால், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து 6 முக்கியமான பொருட்கள் ஆய்வுக்காக அமெரிக்காவின் பிளோரிடாவில் உள்ள, ’பீட்டா’ ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதோடு, தொல்காப்பியம், அகநானுறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களும் காலத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது.
ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என்பது தெரிய வந்தது. இதனால், சங்க காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்றும், ஆய்வுகளின் மூலம் சங்க காலம் என்பது கி.மு. 6ஆம் நூற்றாண்டு என்பதும் ஆதாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளதாக அன்றைய தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.-ம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
சங்க காலம் என்பது இனி கி.மு. 8ஆம் நூற்றாண்டு
இந்நிலையில், கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், மத்திய தொல்லியல துறை இயக்குநர் வித்யாவதியிடம் சமர்பித்துள்ளார். 12 பாகங்களையும் 982 பக்கங்களையும் கொண்ட அந்த ஆய்வறிக்கையில் தமிழர்களின் நாகரிகம் எவ்வளவு தொன்மையானது என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கியுள்ளார். குறிப்பாக, சங்க காலம் என்பது மேலும் 800 ஆண்டுகள் பின்னோக்கி உள்ளது என்பது தெளிவாகிறது என குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் மூலம், தமிழ்நாடு தொல்லியல் துறை கணித்த சங்க காலம் என்பது கி.மு. 6ஆம் நூற்றாண்டு என்பது இப்போது கி.மு. 8ஆம் நூற்றாண்டாக மாறியுள்ளது. எனவே இந்த அறிக்கையின் மூலம் இனி சங்க காலம் என்பது கி.மு. 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலானதாக வரையறுக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் பெருமைப்பட வைக்கும் ஆய்வு முடிவு
அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்பித்துள்ள கீழடி ஆய்வறிக்கையின் மூலம், சங்க காலம் என்பது கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பது தெரிய வந்திருப்பதால், ஏற்கனவே கீழடி நாகரிகம் 2,600 ஆண்டுகள் முற்பட்டது என்பது இன்னும் பின்னோக்கி செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.
அதனால், சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழர்கள் எழுத்தறிவு, படிப்பறிவு பெற்றவர்களாக இருந்திருந்தனர் என்பது ஆய்வின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இது தமிழர்கள் ஒவ்வொரும் பெருமைக்கொள்ளத்தக்க ஆய்வறிக்கையாக உள்ளது.
சங்க காலம் என்பது என்ன ?
சங்க காலம் என்பது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலத்தை குறிக்கும். முதல் சங்கம் கடல் கொண்ட தென் மதுரையிலும், இடைச் சங்கம் கபாடபுரத்திலும், கடைச் சங்கம் மதுரையிலும் இருந்துள்ளது. கி.மு என்று குறிப்பிடும்போது மூன்று சங்கத்தையும் ஒன்றாக வைத்தே இப்போது குறிப்பிட்டு வருகிறார்கள்.
ஆனால், கீழடியில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சங்க காலம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வறிக்கையின் மூலம் அறியப்படும் அதே நேரத்தில், கீழடி என்பது மதுரைக்கு மிக அருகில் இருப்பதால், இது கடைச் சங்கம் காலமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இப்போது கீழடி என்று அந்த இடத்திற்கு பெயர் இருந்தாலும் முன்பு ‘கூடல்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது.
ஆனால், கடல் கொண்ட தென்மதுரை, கபாடாபுரம் பகுதிகளை கண்டறிந்து ஆய்வு நடத்தினால் முதற் மற்றும் இடை சங்கத்தின் காலம் இன்னும் முன்னோக்கி செல்லும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அசோகருக்காக தமிழர் வரலாற்றை மறைப்பதா ?
வடக்கில் பாடாலிபுத்திரத்தை தலைநகராக ஆண்ட அசோக மன்னன் கல்வெட்டு மற்றும் அவர் ஆட்சி காலம் சார்ந்த ஆதாரங்கள் கிடைத்தபோது, அதனை ஆய்வு செய்தனர். அதில் அசோகர் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பது தெரியவந்தது. ஆனால், தமிழர்களின் சங்க காலம் என்பது கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாக இருப்பதால், அதனை ஏற்றுக்கொள்ள வட மாநிலத்தவர் மறுப்பதால், தமிழர் வரலாற்றை மத்திய ஆட்சியில் இருந்த பலரும் நீர்த்துப்போக செய்ய முயற்சித்தனர் என்றும் அதன் வெளிப்பாடுதான் கீழடி அகழாய்வை மூட வைத்ததும் எனவும் தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான அறிக்கையை பல ஆண்டுகளாக வெளியிடாமல் வைத்திருந்ததும் முறையாக மத்திய தொல்லியல் துறை தமிழ்நாட்டில் ஆய்வு நடத்தாததும் இந்த காரணத்திற்குதான் என்று சொல்லப்பட்டது. அதே நேரத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறையும் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து உதயசந்திரன் தொல்லியல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டபோதுதான் ஓரளவிற்கு விழித்துக்கொண்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இப்போது என்ன செய்ய வேண்டும் ? – ஆய்வாளர் மன்னர் மன்னன்
இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னனிடம் கேட்டபோது, சங்க காலம் என்பது கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பது சொல்வதும் மிக குறைவான அளவுகோல்தான். இப்போது இருக்கும் மதுரை என்பது மூன்றாவது தமிழ் சங்கம் நடந்த மதுரை. அதனால், 3வது அல்லது கடைச் சங்கம் தொடங்கியதுதான் கி.மு. 8ஆம் நூற்றாண்டாக இருக்க முடியுமே தவிர தமிழ் சங்கம் தொடங்கிய காலமே கி.மு. 8ஆம் நூற்றாண்டு கிடையாது. அதற்கு முற்பட்டு நாம் கணிக்க முடியாத ஆண்டுகளுக்கு முன்பே முதல் தமிழ் சங்கம் உருவாகியிருக்க வேண்டும். அப்படி ஒரு சங்கம் உருவாக்கி இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் உருவாகி இருக்க வேண்டும் ? தமிழர்கள் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருக்க வேண்டும் ? என்பதை எண்ணிப் பார்த்தால் தமிழின் தமிழர்களின் வரலாறுதான் இந்த பூலோகத்தில் முதன் முதலாக தோன்றியதாக இருக்கும்.
இப்போது, குறைந்தப்பட்சம் அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்துள்ள ஆய்வறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, தமிழர் நாகரிகத்தின் சங்க காலம் என்பது கி.மு. 8ஆம் ஆண்டு என்பதை அதிகாரப்புர்வமாக அறிவிக்க வேண்டும். அதன் மூலமாக, தமிழ்நாட்டில் ஆய்வுகளை இன்னும் விரிவுப்படுத்துவதோடு, எதிர்கால சந்ததியினர் தெரிந்துக்கொள்ள அருங்காட்சியங்கள் அமைக்க முடியும் என்றார்.