திருவள்ளூர் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயிலும் பயணிகள் ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டது. மைசூர் தர்பங்கா பயணிகள் விரைவு ரயிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு 8.27 மணியளவில் 90 கி.மீ வேகத்தில் வந்து கொண்டிருந்தபோது ரயில் விபத்துக்குள்ளானது. லூப் லைனில் சென்றபோது நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இரு ரயில்களும் மோதிக்கொண்டதில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 12578 எண் கொண்ட பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது. ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
6 ரயில் பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ரயில் விபத்தால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சில ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில் எண் 01928 மதுரை - கான்பூர் ரயில் இன்று இரவு 11.35 மணிக்கு கிளம்ப இருந்தது. ஆனால் அந்த ரயில் நாளை அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.55 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.