ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சின்னவான் பிள்ளைத் தெருவைச் சேர்ந்த கணேஷ்ராஜ் என்ற இளைஞர், காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணி கடந்த 10 மாதமாக நடந்து வருகிறது. மொபைல் போனை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆள் இருக்கும் இடமும் தெரியாமல், தாய், தந்தையர் வலைவீசியும் பலனளிக்காத நிலையில், ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரின் முயற்சிகளும் பலனளிக்கவில்லை. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனிப்பிரிவு வழியாக அனுப்பிய மனு மீதும் நடவடிக்கை இல்லை. இவை ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் தீவிர தேடுதல் படலத்தையும் நிறுத்தவில்லை. ஆட்சி மாற்றத்திற்குப் பின் முதல்வர் ஸ்டாலினுக்கு, கணேஷ்ராஜின் பெற்றோர் மனு அனுப்பினர். ராமநாதபுரம் எஸ்.பி., கார்த்திக்கு அந்த மனு பார்வர்டு செய்யப்பட்டு, விசாரணை முடுக்கிவிடப்பட்டது. 





தனிப்பிரிவு போலீசார் களத்தில் இறங்கினர். சமீபத்திய குற்றங்களில் பெரும்பாலும் பின்னணியில் இருப்பது நண்பர்களே. அந்த அடிப்படையில் கணேஷ்ராஜின் நண்பர்களிடம் விசாரணையை துவக்கினர் போலீசார். நினைத்தபடியே க்ளூ கிடைத்தது. முத்து சேரன், அஜித் மைக்கேல் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், முன்னுக்கு பின் முரணான தகவல்களை பகிர்ந்தனர். வழக்கமான போலீஸ் ‛பாணியில்’ விசாரித்த போது, 10 மாதங்களுக்கு முன் கணேஷ்ராஜ் உடன் நண்பர்கள் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது கஞ்சா போன்ற போதை வஸ்துகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. விளையாட்டாக பேசிக்கொண்டிருந்த நண்பர்கள் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளனர். முத்து சேரன், அஜித் மைக்கேல் இணைந்து கணேஷ் ராஜ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். போதை தலைக்கேறியதால், அவரை அடித்தே கொன்றனர். பின்னர் செம்மடம் ரயில்வே தண்டவாளம் அருகே உடலை புதைத்துள்ளனர். பின்னர் எதுவுமே தெரியாத மாதிரி, வழக்கம் போல இருந்துள்ளனர். 


காணாமல் போனவரின் பெற்றோர் தேடி வந்த விசாரித்த போது, ‛அவனை பார்க்கவே இல்லையே...’ என, கூறியுள்ளனர். பின்னர் ஒரு வழியாக போலீசார் கண்டுபிடித்து ஒப்புக்கொண்ட பின், புதைத்த இடத்தை குற்றவாளிகள் அடையாளம் காட்டினர். அங்கு சென்ற போலீசார், புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டிய போது, அழுகிய நிலையில் சிதைந்து போன உடலும், எலும்புத் துண்டுகளும், தலைமுடியும், நய்ந்து போன ஆடையும் கிடைத்ததன. கணேஷ் ராஜின் தந்தை வரவழைக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டது. அவர் உறுதி செய்த அடிப்படையில் கொலையான கணேஷ்ராஜின் எஞ்சிய உடல் பாகங்கள் 10 மாதங்களுக்கு பின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட முத்துசேரன், அஜித் மைக்கேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மது போதையில் நண்பனை கொலை செய்து, அதை மறைத்து, கொலையானவரின் குடும்பத்தாருடனேயே பழகி வந்த சக நண்பர்களின் செயல், சம்மந்தப்பட்ட ஊரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.