திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்றக்கோரி போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தொண்டர்கள், இந்து அமைப்பினர் பலரும் கைது செய்யப்பட்டதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளிக்கிறது. 

Continues below advertisement

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை திருநாளில் தீபமேற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் தீபமேற்ற அனுமதியளித்து உத்தரவிட்டார். ஆனால் முதலில் தீபமேற்ற அனுமதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மனுதாரர்களில் ஒருவரான ராமரவிகுமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை தீபமேற்ற செல்ல நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி தமிழக போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. 

இப்படியான நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன்  உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன்  விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த அவர், இன்று இரவு 7 மணிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் தனது உத்தரவை நிறைவேற்றிய அறிக்கையை டிசம்பர் 5ம் தேதி காலையில் தாக்கல் செய்ய வேண்டும் என காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார். 

Continues below advertisement

இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையை நோக்கி பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் செல்ல தொடங்கினர். பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அங்கு வந்தார். மலை உச்சியில் தீபமேற்ற சென்ற நிலையில் அவர்களை காவல்துறையினர் தடுத்தனர். 10 பேருக்கு அனுமதி என்ற நிலையில் யார் அவர்கள் என்ற விவரம் கேட்கப்பட்டது. தொடர்ந்து இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதாலும் மலையேற அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர். 

இதனையடுத்து நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவினர், இந்து அமைப்பினர் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜகவினர், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என அனைவரையும் போலீசார் கைது செய்தனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.