பெங்களூரைச் சேர்ந்த 22 வயது இளைஞரான ஆன்ஷுல் உத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த காணொளியில், பார்த்து கொண்டிருக்கும் வேலையை தான் ராஜினாமா செய்யப்போவதாக தெரிவிக்கிறார். அவரின் ராஜினாமா முடிவு, 'ஜென் Z' தலைமுறையினரின் வேலை மனப்பான்மை, திருப்தி மற்றும் மனநிறைவு குறித்த ஒரு பரந்த விவாதத்தை சமூக ஊடகங்களில் தூண்டியுள்ளது.
தனது முழுநேரப் பணிக்கு இணையாக பகுதிநேர சமூகவலைத்தளங்களில் Content creator - ஆக இருந்து வந்த ஆன்ஷுல், எந்தவொரு மாற்றுத் திட்டமும் இல்லாமல், தனது வேலையை "மிகவும் சலிப்பானது" என்று கூறி வெளியிட்ட வீடியோ, இன்றைய இளைஞர்களின் முழுநேர வேலை நடைமுறை குறித்த ஒரு புதிய சமூக உரையாடலுக்கு வித்திட்டுள்ளது.
அந்த வீடியோவில் என்னதான் இருந்தது..!?
ஆன்ஷுல் உத்தையா தனது இன்ஸ்டாகிராம் காணொளியில், தனது முழுநேர வேலையை மனரீதியாக சோர்வடையச் செய்வதாகவும், நேரத்தை வீணடிப்பதாகவும் உணர்ந்ததால் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். "நான் செய்யும் வேலையை நான் வெறுக்கிறேன். எனது தற்போதைய வாழ்க்கைச் சூழலையும் நான் வெறுக்கிறேன்," என்று அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டார். தனது 20களின் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு இளைஞரின் இந்த வெளிப்படையான விரக்தி, இன்றைய கார்ப்பரேட் கட்டமைப்புகள் இளம் ஊழியர்களின் மனநலன் மற்றும் ஈடுபாட்டை உறுதி செய்வதில் எதிர்கொள்ளும் சவால்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மேலும், ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டு மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டப்படிப்புக்கு இடம் கிடைத்தும், 'படிப்பு-பின்பு-வேலை' என்ற பாதை கூட தனக்கு உற்சாகத்தை அளிக்கவில்லை என்று அவர் கூறியது, அவரது அதிருப்தி ஒரு குறிப்பிட்ட வேலையைப் பற்றியது மட்டுமல்ல, ஒட்டுமொத்த வழக்கமான பணி சூழல் மீதானது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இதற்கு மாற்றாக, கடந்த மூன்று மாதங்களாக சமூகவலைதளங்களில் 'Content உருவாக்கி வருவதில் அதிக மகிழ்ச்சியையும் ஒரு எதிர்காலத்தையும் காண்பதாகக் கூறிய அவர், அந்தத் துறையில் முழுமையாக கவனம் செலுத்தவே இந்த முடிவை எடுத்ததாக விளக்கினார்.
வீடியோவால் பிரபலமாக காரணம்..
சமூக ஊடகங்கள், தனிப்பட்ட கதைகளை சில மணி நேரங்களில் பொது விவாதங்களாக மாற்றும் சக்திவாய்ந்த தளங்களாக விளங்குகின்றன. ஆன்ஷுலின் வீடியோ வைரலான பிறகு, இரண்டு நாட்களில் அவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கை 10,000-லிருந்து 22,000-ஐத் தாண்டியது. இந்த விவாதத்தில் வெளிப்பட்ட கருத்துக்கள் மூன்று பிரதான சிந்தனைப் பிரிவுகளாகப் பிரிந்து, சமூகத்தில் தலைமுறை இடைவெளி மற்றும் மாறிவரும் மதிப்பு அமைப்புகள் குறித்த ஆழமான பிளவுகளைப் பிரதிபலித்தன.
"நீங்கள் உங்கள் மனசு சொல்வதை கேட்கிறீர்கள்" என்பது போன்ற கருத்துக்கள் மூலம் பலர் ஆன்ஷுலின் முடிவை ஆதரித்தனர். மறுபுறம், "இந்தத் தலைமுறையினர் எளிதான வழியை விரும்புகிறார்கள்" மற்றும் "உங்களுக்குச் செலுத்த வேண்டிய நிதிச் சுமைகள் ஏதும் இல்லை போலும்" போன்ற கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.
வீடியோ மூலம் சமூகத்திற்கு கிடைத்த பாடம்
ஒரு தனிநபரின் கதை, சில சமயங்களில் ஒரு முழுத் தலைமுறையின் கூட்டு உணர்வுகளையும், சமூகத்தில் மாறிவரும் நெறிகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக அமைகிறது. ஆன்ஷுல் உத்தையாவின் முடிவு, ஜென் Z தலைமுறையினரிடையே பரவலாகக் காணப்படும் பணிச் சூழலில் உள்ள மன உளைச்சல், வேலை மீதான அதிருப்தி மற்றும் எதார்த்தமான நடைமுறையை காட்டிலும் தனிப்பட்ட மனநிறைவுக்கு அளிக்கப்பட்டு வரும் அதி முக்கியத்துவம் ஆகியவற்றின் ஒரு குறியீடாகவே பார்க்கப்படுகிறது. நிலையான வேலை, சமூக அந்தஸ்து போன்ற பழைய அளவுகோல்களை விட, செய்யும் வேலையில் கிடைக்கும் மகிழ்ச்சி, மன அமைதி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றுக்கு இந்தத் தலைமுறை முன்னுரிமை அளிப்பதை இது காட்டுகிறது. ஆகவே, ஆன்ஷுலின் இந்த தனிப்பட்ட முடிவு, பணியிடங்களில் Gen Z தலைமுறையினரின் திறமையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், சம்பளத்தைத் தாண்டி மனநிறைவுக்கும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலுவாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.