மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். 

Continues below advertisement

கார்த்திகை தீப திருநாளில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பின்புறம் உள்ள மலை உச்சியில் தீபமேற்ற அனுமதிக்க வேண்டும் என கூறி இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் திருக்கார்த்திகை அன்று தீபமேற்றலாம் என உத்தரவிட்டார். இதற்கிடையில் இந்த உத்தரவை எதிர்த்து திருப்பரங்குன்றம் முருகன் கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தார். 

எனினும் திருக்கார்த்திகை அன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் தீபமேற்றவில்லை என்றால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார். ஆனால் நேற்று (டிசம்பர் 3) கார்த்திகை தீப நாளன்று தீப மலையில் தீபம் ஏற்ற தமிழக போலீசார் அனுமதிக்கவில்லை. இதனைக் கண்டித்து இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. 

Continues below advertisement

இந்த நிலையில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டிருப்பதாக தோன்றுகிறது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிப்பார் எனவும் தெரிவித்தது. 

இதனையடுத்து தனது உத்தரவை பின்பற்றாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உடனடியாக விசாரித்தார். அப்போது திருப்பரங்குன்றம் கோயில் அலுவலர், காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் 5 நிமிடத்தில் காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதில் காவல் ஆணையர் ஆஜரானபோது அவரிடம் சரமாரியாக திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வியெழுப்பினார். இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். 

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்த மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை ரத்து செய்தும் அவர் தீர்ப்பளித்துள்ளார். மேலும் இன்று (டிசம்பர் 4) இரவு 7 மணிக்குள் மலை உச்சியில் தீபமேற்ற வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து நாளை (டிசம்பர் 5) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும் தீபமேற்ற செல்பவர்களின் பாதுகாப்புக்காக காவல்துறை ஆணையர் தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், இன்றிரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் எனவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்துக்கு போலீசார் பாதுகாப்புக்காக சென்றனர்.