திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபமேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன?
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் முருகனின் முதல் படை வீடு அமைந்துள்ளது. இதன் பின்னால் இருக்கும் மலையின் உச்சியில் காசி விஸ்வநாதர் கோயில், சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்கா அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருநாளில் முருகன் கோயில் உள்ள பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம். இந்த நிலையில் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை நாளில் தீபமேற்ற அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என இந்து அமைப்பினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் தீபமேற்ற உத்தரவிட்டார். அதன்படி டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளில் மாலை 6 மணிக்கு தீபமேற்ற வேண்டும். இல்லாவிட்டால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இதற்கிடையில் டிசம்பர் 2ம் தேதி இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருப்பரங்குன்றம் முருகன் கோயில் செயல் அலுவலர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில் கார்த்திகை தீபத்திருநாளில் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் மலை உச்சியில் தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து அமைப்பின் போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை போராட்டக்காரர்கள் தாண்டி உள்ளே செய்ய முயன்றனர். மலை உச்சியில் இரவு 8 மணி தீபம் ஏற்றப்படவில்லை. இதற்கிடையில் மனுதாரர்களில் ராம ரவிகுமார் என்பவர் மீண்டும் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,மனுதாரர் ராம ரவிகுமார் சிஎஸ் ஐஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் 10 பேரை தீபமேற்ற அழைத்து செல்லலாம் என உத்தரவிட்டார்.
எனினும் அவர்களை தமிழக காவல்துறை அனுமதிக்கவில்லை. இன்று (டிசம்பர் 4) காலை வழக்கு விசாரணைக்கு வரும்போது அதில் கூறப்படும்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன் - ராமகிருஷ்ணன் அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதன்படி தமிழக அரசு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதில், “மாநில அரசு தன்னுடைய கடமையை செய்ய தவறியதால் தான் சிஎஸ் ஐஎஃப் வீரர்களை தனி நீதிபதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனுதாரரின் பாதுகாப்புக்கு அனுப்பினார். அரசு எதோ நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.
நீதிமன்ற அறிவுரைகளை தமிழ்நாடு அரசு அமல்படுத்த தவறியதால் மனுதாரருக்கு ஆதரவாக வழக்கில் உத்தரவிடப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவில் விதி தவறுகள் இருப்பதாக தெரியவில்லை. இந்த வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்ந்து விசாரிப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.