கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்து நேற்று தன்னுடைய சமூக வலைதளங்களில் போஸ்டர் ஒன்றை பதிவிட்டார் அதிமுக மாஜி, இன்றைய த.வெ.க நிர்வாகி செங்கோட்டையன். அதில், அவர் கட்சித் தலைவர் விஜயின் புகைப்படத்தோடு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களும் இடம்பெற்றன. குறிப்பாக, அரசியலில் எம்.ஜி.ஆர் காலத்து நபரான செங்கோட்டையனின் போஸ்டரில், அரசியலில் இதுவரை சோபிக்காத புஸ்ஸி ஆனந்தின் புகைப்படமும் இடம்பெற்றது.
இந்நிலையில், இந்த போஸ்டர் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான, கலவையான விமர்சனங்கள் எழுந்தன. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்கள் அல்லாதவர்களை ஏன் செங்கோட்டையன் தன்னுடைய போஸ்டரில் பதிவு செய்ய வேண்டும். அவர் இன்னும் அதிமுக-காரராகவே இருக்கிறார். அவர் முதலில் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக நினைக்க வேண்டும் என்று அக்கட்சியினரே சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
எடப்பாடியை விட புஸ்ஸி ஆனந்த் பெரியத் தலைவரா?
அதோடு, எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவரே கிடையாது என்று சொன்ன செங்கோட்டையன் புஸ்ஸி ஆனந்தின் புகைப்படத்தை போட்டு போஸ்டர் அடித்துள்ளார் என்று அதிமுகவினரும் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் சண்டமாருதம் செய்தனர்.
இந்நிலையில், நேற்று போட்ட கார்த்திகை தீப போஸ்டரை இன்று காலையில் தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கினார் செங்கோட்டையன். ஆனால், விடாக்கொண்டன் விட்டாலும் கொடா கண்டன் விடாதது மாதிரி செங்கோட்டையன் போஸ்டரை டெலிட் செய்தது ஏன்? என இன்னொரு தரப்பினர் காலையில் இருந்து செங்கோட்டையனை டேக் செய்து கேள்விகளை எழுப்பி வந்தனர்.
குறிப்பாக, தருமபுரி திமுக முன்னாள் எம்.பி. செந்தில்குமார், ‘தீபம் அணைந்தது என்றும், செங்கோட்டையன் தன்னுடைய சமூக வலைதள போஸ்டரை நீக்கியதற்கு காரணம் புஸ்ஸி ஆனந்த் புகைப்படத்தை சிறியதாக போட்டதாலா?’ என்று நக்கல் செய்யும்விதமாக பதிவிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து வேதாளம் முருங்கைமரம் ஏறும் கதையாய் பலரும் செங்கோட்டையன் போஸ்டரை டெலிட் செய்தது தொடர்பாக விமர்சிக்கத் தொடங்கினர்.
மீண்டும் பதிவிட்ட செங்கோட்டையன் - காரணம் என்ன ?
இந்நிலையில், மீண்டும் நேற்று போட்ட அதே போஸ்டரை செங்கோட்டையன் தன்னுடைய சமூக வலைதளங்களில் பகிருந்திருக்கிறார். அதிலும் நேற்று போட்ட ‘அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துகள்’ என்ற கேப்ஷனையே இன்றும் போட்டு பதிவிட்டுள்ளார். இதையும் விடாத நெட்டிசன்கள், கார்த்திகை தீபம் நேற்றுங்க, இன்னிக்கு இல்ல என்றும், டெலிட் செய்துவிட்டு மீண்டும் அதே போஸ்டரை பகிருந்தது ஏன் எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நேற்று போட்ட போஸ்டருக்கு விமர்சனங்கள் வந்த நிலையில், அதை கண்டு தாங்கிக்கொள்ளமுடியாத செங்கோட்டையனின் அட்மின் இன்று காலை அதை டெலிட் செய்து விட்டதாகவும், இது குறித்து செங்கோட்டையனின் கவனத்திற்கு த.வெ.கவினர் கொண்டுச் சென்ற நிலையில், தன்னுடைய அட்மினை கடிந்துகொண்ட செங்கோட்டையன் அந்த போஸ்டரை மீண்டும் போஸ்ட் செய்யச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
ஒரே ஒரு போஸ்டருக்கே இவ்வளவு அக்கப்போரா..?