முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை இன்று நடைபெறும் நிலையில், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வருகை தர உள்ளனர்.
முத்துராமலிங்க தேவர்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன்னில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தார் முத்துராமலிங்க தேவர். இன்றைய தலைமுறையினருக்கு அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்பட்டாலும், அனைவருக்குமான தலைவராகவே முத்துராமலிங்க தேவர் திகழ்ந்தார். “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்த அவர் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மறைந்தார்.
பிறப்பும், இறப்பும் ஒரே நாளில் வரும் நிலையில் முத்துராமலிங்க தேவருக்கு ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை ஆகியவை நடைபெறும். அவர் பிறந்த பசும்பொன்னில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை முக்குலத்தோர் சமுதாய மக்கள் தங்கள் குலதெய்வ கோயிலாக கருதி வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் பசும்பொன்னுக்கு வருகை தருவார்கள்.
116வது ஜெயந்தி விழா
அதன்படி முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை இன்று நடைபெறுகிறது. கடந்த இரு தினங்கள் முன்னதாகவே இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டது. முக்குலத்தோர் மக்கள் காப்பு அணிந்து, விரதம் இருந்து பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மேள, தாளத்துடன் பொங்கலிட்டு, நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். அக்டோபர் 28 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய நிகழ்வு, பின்னர் வருஷாபிஷேகம், முத்துராமலிங்க தேவரின் புகைப்பட கண்காட்சி, திருவிளக்கு பூஜை, பால்குடம் எடுத்தல், முளைப்பாரி பவனி என இரு தினங்கள் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அரசியல் தலைவர்கள் மரியாதை
இன்று நடக்கும் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பசும்பொன் செல்கின்றனர். அங்கு முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். முன்னதாக கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என பலரும் வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.இதேபோல் மாவட்டம்தோறும் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க: Madurai: தேவர் ஜெயந்தி விழா: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம் - தெரிஞ்சுகிட்டு போங்க....!