தேவர் ஜெயந்தி


 


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 13 கிலோ தங்கக் கவசம், மதுரை அண்ணாநகர் பகுதியில் இருக்கக்கூடிய பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ளது. அதிமுக பொறுப்பாளராக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நினைவிட பொறுப்பாளர் காந்தி மின்னல், வங்கி மேலாளர்கள் ஆகியோர் கையொப்பமிட்ட பிறகு,  முத்துராமலிங்கத் தேவர் நினைவிடப் பொறுப்பாளர்  திண்டுக்கல் சீனிவாசனிடம்  தங்க கவசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு வாகனம் பசும்பொன்னுக்குக் கொண்டு செல்லப்பட்டது.





 




 

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம்

 


இந்நிலையில் இன்று 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலை அருகே மக்களுக்கான தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார்.



 


சுவரொட்டியால் பரபரப்பு

 


இந்நிலையில் தேவர் குருபூஜைக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்று திருப்புவனம் பகுதியில் பாரத பிரதமர் எடப்பாடியாரே என புகழ்பாடும் சுவரொட்டியால் பரபரப்பு.


 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் அதிமுக சார்பில் இன்று 30-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழாவிற்கு அஞ்சலி செலுத்த  வரும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் சிறு நரியின் சலசலப்பிற்கு   சேலத்து சிங்கம் அஞ்சுவதில்லை என்றும் அல்லு சில்லறைக்கு எல்லாம் அஞ்சாமல் பசும்பொன் வருகை தரும் அஞ்சா நெஞ்சர் என்றும், பரிவட்டம் சூட்டி வரவேற்கிறோம்,  வரேன்னு சொன்னாலே பசும்பொன்னே அதிருதில்ல என்பதுடன் பாரத பிரதமர் எடப்பாடியார் என்ற வாசகத்துடன் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழ்பாடும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். எனினும் இது ஓபிஎஸ் அணியினரை சீண்டும் விதமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணமாக ஓபிஎஸ் அணியினர் சுவரொட்டிகள் ஒட்டுவார்கள் என்பதால், போஸ்டர் யுத்தம் எங்கு போய் முடியுமோ என்ற பதற்றம் நிலவுகிறது.