பசும்பொன்னில் 3 நாட்கள் நடைபெறும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் இன்று (அக்டோபர் 28) முதல் தொடங்கும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தேவர் ஜெயந்தி, குருபூஜை:


இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன்னில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தார் முத்துராமலிங்க தேவர். இன்றைய தலைமுறையினருக்கு அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து முத்துராமலிங்க தேவர் இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்து மறைந்தவர்.அவர் அனைத்து தரப்பு மக்களிடம் நல்ல அன்பை பெற்றிருந்தார். அவர் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மறைந்தார். 


பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுவது வழக்கம். இதில் தென்மாவட்டத்தில் உள்ள மக்கள் திரளாக பங்கேற்பது வழக்கம். வயது வித்தியாசமில்லாமல் மக்கள் காப்பு அணிந்து, விரதம் இருந்து பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மேள, தாளத்துடன் பொங்கலிட்டு, நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். 


இன்று தொடக்கம்:


விழாவின் முதல் நாளான இன்று காலை 7 மணியளவில் மங்கள இசை மற்றும் கணபதி ஹோமத்துடன் ஆன்மீக விழாவானது தொடங்குகிறது. தொடர்ந்து சிறப்பு யாஜ பூஜை நடைபெற்று பால கணபதி, பால முருகன், தேவர் கோவில் ஆகியவற்றிற்கு வருசாபிஷேக பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜைகள் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடந்து முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைக்கிறார். மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 7 மணியளவில் தேவரின் தேரோட்ட நிகழ்வும் நடைபெறுகிறது.  நாளை 2வது நாளில் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் தலைமையில் நடக்கிறது. 


தலைவர்கள் பங்கேற்பு:


அன்றைய தினம் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்துகின்றனர்.


பசும்பொன்னில் நடைபெறும் விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மையங்கள், வாகன சோதனை ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் முந்தைய அதிமுக அரசு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் வழங்கி இருந்தது. குருபூஜையையொட்டி தங்க கவசம் அணிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் அதன் அருகில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.