அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் மாற்றம் இல்லை என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இல்லை:
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜக உடன் கூட்டணி முறிவு என்பதில் எந்த மாற்றமும் இல்லை. செப்டம்பர் 18ம் தேதி எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என தெரிவித்தார். அதிமுகவின் மூத்த தலைவர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் டெல்லி சென்று, பாஜக தலைவர்களை சந்தித்து இருந்தனர். இந்நிலையில் தான், பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டதில் எந்த மாற்றமும் இல்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் பாஜக இல்லை:
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “செப்டம்பர் 18ம் தேதி எடுக்கப்பட்ட அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்தகட்ட நடவடிக்கு குறித்து நாளைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். அதிமுக எம்.பி டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்ததில் என்ன தவறு? கூட்டணி குறித்து தான் பேசினோம் என யார் சொன்னது? தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசியிருக்கலாம் அல்லவா? ” என கூறினார்.
”சோதனைகளை கண்டு அஞ்சும் கூட்டம் இல்லை”
பாஜகவை விமர்சித்ததால் உங்களை சார்ந்த நபர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர்சோதனை நடத்தலாம் என தகவல்கள் வெளியாகின்றனவே என கேள்வி எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “மடியில் கணம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படும் இயக்கம் கிடையாது அதிமுக. 1972ம் ஆண்டு முதல் எத்தனையோ சோதனைகளை கடந்து வந்துள்ளோம். ஜெயலலிதா மீது வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு எல்லாம் உள்ளது. இதையெல்லாம் பார்த்தும் நாங்கள் தொய்வடைந்துவிடவில்லை. பல நெருக்கடிக்கு மத்தியில் தான் அதிமுகவை இருமுறை ஜெயலலிதா வெற்றிபெற வைத்தார். மக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம்” என விளக்கமளித்தார்.
தொடரும் அதிமுக - பாஜக கூட்டணி குழப்பம்:
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக - பாஜக இடையேயான கூட்டணியில் கடும் குழப்பம் நிலவி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும் கருத்துகள் தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. பெரியார், அண்ணா மற்றும் ஜெயலலிதா தொடர்பாக அவர் கூறும் கருத்துகள் தொடர்ந்து சர்ச்சைய ஏற்படுத்தி வருகிறது. இதையொட்டி தான், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை எனவும், தேர்தல் வரும்போது கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றும் கடந்த வாரம் ஜெயக்குமார் கூறினார். இதனால், அதிமுக மற்றும் பாஜகவினர் இடையே சமூக வலைதளங்களில் கடும் கருத்து மோதல் நிலவியது. பின்பு, கூட்டணி தொடர்பாக கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது, நிர்வாகிகள் யாரும் இதுதொடர்பாக பேச வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனிடையே, அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.