உள்ளாட்சி தேர்தல் கொஞ்சம் வினோதமானது. அங்கு எதுவும் நடக்கும். எல்லாம் நடக்கும். உள்ளூர் செல்வாக்கு பெற்றவர்கள் போட்டி போடுவதாலேயே அது உள்ளாட்சி என்று அழைக்கப்படுகிறதோ என்னவோ. உள்ளாட்சி தேர்தல் வினோதமானது என்று கூற காரணம் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் ஒரு விதமான ஈர்ப்பு கொண்டது. ஒரு குறுகிய வட்டத்தில் வசிப்போர், எதிர் எதிர் துருவங்களாக செயல்படுவது உள்ளாட்சி தேர்தலில் தான். உறவினர், குடும்பத்தார், நண்பர்கள் என நெருக்கமானவர்கள் கூட உள்ளாட்சி தேர்தலில் உரசிக் கொள்வதுண்டு.
அண்ணனை எதிர்த்து தம்பி... தம்பியை எதிர்த்து அண்ணன்... அப்பாவை எதிர்த்து மகன்... மகளை எதிர்த்து அப்பா... இப்படி பல போட்டியாளர்களை இந்த உள்ளாட்சி தேர்தல் கண்டிருக்கிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தின் 8 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே அங்கு பரபரப்பாக பேசப்பட்டது ஒரு விசயம் தான். அது திமுக சார்பில் போட்டியிடும் கருப்பையாவை எதிர்த்து அவரது மனைவி ஈஸ்வரி சுயேட்சையாக போட்டியிட்டது தான்.
போட்டியில் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பிற்கு நேற்று வாக்கு எண்ணிக்கைக்கு பின் பதில் கிடைத்தது. அதிமுக, அமமுக உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் களத்தில் நின்ற அந்த தேர்தலில், 1702 வாக்குகள் பெற்று கருப்பையா அமோக வெற்றி பெற்றார். அவரது வெற்றியை விட அவரது மனைவி பெற்ற வாக்குகளை அறியவே அனைவரும் ஆர்வமாய் இருந்தனர். அந்த ஆர்வத்திற்கு கொஞ்சம் பங்கம் வைக்காமல் ஒரே ஒரு வாக்கை பெற்று தோல்வி அடைந்தார் ஈஸ்வரி. தோல்வியை விட கணவர் வெற்றி பெற்றது அவருக்கு சந்தோஷம் தான். அப்படி இருக்கு ஏன் இவர் தேர்தலில் போட்டியிட்டார் என்கிறீர்களா... எல்லாம் ராஜதந்திரமாம்...
மனைவி ஈஸ்வரி ஏன் எதிர்த்து போட்டியிட்டார் என கணவர் கருப்பையாவிடம் ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்டு கேட்டோம்.... ‛சார்... அது சும்மா... தேர்தல் வேலைக்கு பூத் ஏஜெண்ட் வேணும்ல அதுக்காக தான் சும்மா நிறுத்துனேன். பொதுவா வேறு ஆட்களை தான் இப்படி வசதிக்காக நிறுத்துவாங்க. ஆனால், அவங்க ஏதாவது கோளாறு பண்ணிருவாங்கனு தான்... என் மனைவியை நிறுத்துவேன். அவங்களும் எனக்காக தான் ஓட்டு சேகரித்தாங்க. அதையும் தாண்டி அவங்களுக்கு ஒரு ஓட்டு விழுந்திருக்கு. நான் வெற்றி பெற்றது எனக்கு மட்டுமல்ல அவங்களுக்கு சந்தோசம் தான். அதுக்காக தானே அவங்க தேர்தலில் நின்னாங்க,’’ என்று அப்பாவியாய் அத்தனையையும் சொல்லி முடித்தார் கருப்பையா.
பொதுவாக ஊராட்சி நிர்வாகத்தில் மனைவிகளுக்கு பதில் கணவர் தலையீடு இருக்கும் என நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இங்கு தன் கணவர் உள்ளாட்சியில் வெற்றி பெற மனைவி போட்டியிட்டதும், அதன் பின்னணியில் அவர்கள் ராஜதந்திரம் செய்ததும் இந்த தேர்தலில் கிடைத்த மற்றொரு சுவாரஸ்யம்!