கரூரை அடுத்த காந்திகிராமம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரா(47). கணவனால் கைவிடப்பட்டவர். இவரது தந்தை சின்ன காளை வயது (75). சந்திராவின் ஒரே மகன் ரவிசந்திரன் வயது (29). ரவிச்சந்திரன் பிறந்தது முதலே மாற்றுத்திறனாளியாக வாழ்ந்து வருகிறார். வாய் பேசவும், செயல்பட முடியாத நிலையில் இருந்து வரும் ரவிச்சந்திரனுக்கு அனைத்தும் அவரது தாயார் தான் செய்து வருகிறார். காந்திகிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த சந்திராவுக்கு கொராேனா பரவல் காலம் பேரிடியாக அமைந்தது.
கூலி வேலைக்கு சென்று வந்த சந்திராவிற்கு வேலைக்கு செல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதால், வருவாய் இன்றி வாடகை செலுத்த முடியாமல் தவித்து வந்த அவரிடம், வாடகை செலுத்தாவிட்டால் வீட்டை காலி செய் என்ற உரிமையாளரின் பேச்சு அவரை நிலைகுலையச் செய்தது. சந்திராவின் நிலையறிந்து யாரும் அவருக்கு வாடகைக்குக் கூட வீடு வழங்க முன்வரவில்லை. இதனால் செய்வதறியாது தவித்த சந்திரா இன்று தனது மாற்றுத்திறனாளி மகனுடன் வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்தார்.
அவரது நிலையை அறிந்த மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக மின்சார மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் கலந்து ஆலோசனை செய்தார். அண்மையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரே தீர்வு காண வேண்டும் என தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதனடிப்படையில் உடனடியாக காந்திகிராமம் பகுதியில் நகர்ப்புற குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் 37- எண் கொண்ட வீட்டை (ரூபாய் சுமார் எட்டு லட்சம் மதிப்பு கொண்ட) அவருக்கு ஒதுக்கி கலெக்டர் உத்தரவிட்டார்.
இது போன்ற வீடுகளை பயனாளிகளுக்கு ஒதுக்குவது என்றால் பயனாளிகளின் பங்கு தொகையை ரூபாய் 1,88,000- ஆயிரம் செலுத்தி இருக்க வேண்டும். சந்திராவால் அந்த தொகையை செலுத்த முடியாது என அறிந்த மாவட்ட ஆட்சியர் அந்தப் பணத்தையும் தனது விருப்ப நிதியில் செலுத்தவும் ஏற்பாடு செய்தார்.
மேலும், உடனடியாக அந்த வீட்டில் குடியேறுவதற்கான உரிய வசதிகளை ஏற்படுத்தித் தந்து அன்றே குடியமர்த்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து சந்திரா அவரது தந்தை சின்னகாளை, மகன் ரவிச்சந்திரன் ஆகியோரை வேனில் அழைத்துக்கொண்டு அந்த குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று மாற்றுத்திறனாளி நல அலுவலர், அவர்களை குடியமர்த்தினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த சந்திரா, தன் வாழ்வில் துன்பம் அனைத்தும் தீர்ந்துவிட்டதாகவும், இனி தான் உழைத்து தனது தந்தையையும் மகனையும் தன்னால் காப்பாற்ற இயலும் என்று தெரிவித்த அவர், காலமறிந்து எனக்கு இந்த வீட்டை ஒதுக்கி தந்த தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு மின்சார மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாக தெரிவித்தார்.