முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.03.2023) சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் BRIDGE 23 50-வது மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் பேசியதாவது,
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பாக நடைபெறும் இந்த ஐம்பதாவது பிரிட்ஜ் கருத்தரங்கினைத் தொடங்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை வழங்கிய அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இது தொழில்நுட்ப காலம். தொழில்நுட்பத்தினுடைய யுகமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மனிதரின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக தொழில்நுட்பப் பொருட்கள் இன்றைக்கு மாறியிருக்கின்றன. செல்போன், கம்ப்யூட்டர், இண்டெர்நெட் போன்றவை நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகியிருக்கிறது.
தொழில்நுட்பம், இன்று உலகத்தை ஒரு குடையின்கீழ் கொண்டு வந்திருக்கிறது. உலகில் எங்கோ ஒரு முனையில் நடப்பது - இன்னொரு முனைக்கு அப்போதே தெரியக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் மிகப்பெரிய பயன்பாடு - கல்வித் துறையில்தான் இருக்கிறது. ஒருகாலத்தில் கல்வி அறிவை நாம் தேடிப் பெற்றோம். ஆனால், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, விரல்நுனியில் வந்துவிட்டது; வகுப்பறைகள் நவீனமயமாகிவிட்டன.
கையளவு செல்பேசியில் அனைத்துப் புத்தகங்களும் நமக்குக் கிடைக்கின்றன. மாணவர்கள் அறிவோடு மட்டுமல்ல, அறிவியலோடும் இன்றைக்கு கற்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.
மருத்துவத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் நோய் தடுக்கும் முறை, கண்டறியும் முறை, காக்கும் முறை என எல்லாமே இப்போது எளிமையாக வந்திருக்கிறது. தனிமனித பாதுகாப்பையும், சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்ய தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைக்கு மிக இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.
இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து, நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் தொழில்நுட்பம் பேருதவி புரிந்து கொண்டிருக்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில், தொழில்நுட்பம் பல பிரமிப்பூட்டும் மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. ஒரு காலத்தில் கனவாகத் தோன்றியது எல்லாம், இப்போது உண்மையாக வந்து கொண்டிருக்கிறது. எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை, ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அப்படிப்பட்ட தகவல் தொழில்நுட்பத்தை அரசு நிருவாகத்திலும், மக்கள் சேவையிலும் புகுத்தி, நலத் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்று சேர்ந்திட வேண்டுமென்பதை நன்கு உணர்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் , தனது ஆட்சிக் காலத்தில், இங்கே அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுச் சொன்னதைப் போல, தகவல் தொல்நுட்பத் துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்திக் காட்டினார்.
தகவல் தொழில் நுட்பத்திற்கு - இரண்டு பக்கம் உண்டு. அதனை எப்படி, எந்தளவுக்கு, எந்த நோக்கத்துக்கு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அதனுடைய பயன்கள் இருக்கும்.
இளைய தலைமுறை தங்களது வளர்ச்சிக்கு இதனை பயன்படுத்த வேண்டுமே தவிர, தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது. தொழில் நுட்பங்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தும் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. வதந்திகளைப் பரப்பி சட்டம் ஒழுங்கை கெடுக்கவும் இதனை சில அரசியல் சக்திகள் பயன்படுத்துகிறார்கள். ஆபாச வலைத்தளங்களும் பெருகி வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு மனித உயிர்களை நித்தமும் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.
எனவே, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும்; நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டு பேசியிருந்தார்.