வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த லோகேஷ் வயது (30) இவர் கடந்த 7-ஆம் தேதி மாலை வேலப்பாடியில் உள்ள வங்கியில் 15 சவரன் நகைகளை அடமானம் வைக்க கொண்டு வந்தார். அப்போது வங்கியில் நகைக்கு குறைந்த தொகை கொடுப்பதாக வங்கியில் கூறியதால் நகைகளுடன் வெளியே வந்த லோக்கேஷ் அவருடைய இரு சக்கர வாகனத்தில்  நகை பையை மாட்டிவிட்டு இது குறித்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் . அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு மர்ம ஆசாமிகள் இருசக்கர வாகனத்தில் இருந்த நகை பையை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் வேகத்தில் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். அப்போது வேலூர் எஸ்பி பங்களா எதிரே சென்றபோது முன்னாள் சென்ற சரக்கு ஆட்டோ மீது நகை பறித்து ஆசாமிகள் இருசக்கரம் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஹெல்மெட் கழட்டி வீசிவிட்டு நகையுடன் தப்பி ஓடினர்.


 




பட்ட பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை குறித்து வேலூர் தெற்கு குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் ஈடுபட்டதும் திருட்டு இரு சக்கரம் வாகனம் கொண்டு ஒரு காரின் பதிவு எண்ணை மாட்டிக் கொண்டு வந்து நகை பறிப்பில்  ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து இருசக்கர ஆசாமிகளை பிடிக்க 3 தனிப்படை காவல்துறையினர் சேலம் ,திருச்சி, கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையை வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஷ்யாமளா தலைமையிலான காவல்துறையினர் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினார்.


 




 


அதில் அவர்கள் 3 நபர்களும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வேலைப்பாடியில் நடந்த நகை பறிப்பு வழக்கில் அவர்களுக்கு தொடர்புடையது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் வயது (37), சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் வயது (24 ), திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் வயது (23), என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட  3 பேரும் சேர்ந்து திட்டமிட்டு லோகேஷ் நகைப்பையை திருடியதும், வங்கியின் உள்ளே இருந்து லோகேஷின் நடவடிக்கைகள் குறித்து செந்தில்குமார் வெளியே இருந்த ஈஸ்வரன், ராஜசேகரிடம் செல்போனில் கூறியதும், அவர்கள் 2 பேரும் நகைப்பையை திருடி இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றதும், 3 பேர் மீதும் பல்வேறு மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட நகை, பணம் பறிப்பு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 பவுன் நகைகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. 10 பவுன் நகையை செந்தில்குமார் மனைவியிடம் கொடுத்ததாகவும், அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.