சென்னை வேளச்சேரியில் திறக்கப்பட்ட முதல் நாளே பிரியாணி கடை ஒன்றுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ள சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழக அளவிலும் இந்திய அளவிலும் கொரோனா பரவலின் வேகம் அதிகமாக உள்ளது. கொரோனா இரண்டாம் அலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் மக்களிடையே தடுப்பூசி குறித்த, சந்தேகம் பயம் அதிகரித்துள்ளது. 




இந்நிலையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவலால் தமிழகத்திலும் 10 நாட்களுக்காகவாவது ஊரடங்கு தேவை என்று இன்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர் மருத்துவ பிரதிநிதிகள். ஆனால் மீண்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் மக்கள் கொதித்துவிடுவார்கள்,வேண்டுமென்றால் கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம் என்று அரசு தரப்பில் பதிலும் அளிக்கப்பட்டது. ஆகையால் தமிழகத்தின் தற்போதைக்கு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகி, தற்போது இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள 'The Wedding Biriyani' என்ற கடை கொரோனா தடுப்புவிதியை மீறி செயல்பட்டதாக கூறி அந்த கடை திறக்கப்பட்ட முதல் நாளே சீல் வைத்துள்ளனர் அதிகாரிகள். இன்று அந்த கடையில் பிரியாணி வாங்க ஒரே சமயத்தில் 150-க்கும் அதிகமான மக்கள் அங்கு கூடிய நிலையில் அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். கொரோனா பரவலின் வேகத்தை குறைக்க அரசு பல விதிகளை பிறப்பித்தலும் மக்கள் அதனை முறையாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை முழுமையாக வெல்லமுடியும் என்பது நிதர்சனம்.   


பொருளாதார ரீதியாக மக்கள் பாதிப்படையாமல் இருக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே அதன் நூறு சதவிகித பலனை அடையமுடியும்.