கோவிட் -19 காலங்களில் பொது மக்களுக்கு தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதற்கான மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்துவைத்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " அண்ணார் விவேக் மரணத்துக்கும், கொரோனா தடுப்பு மருந்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. விவேக் அவர்கள் திரைப்படங்கள் மூலமாகவும், தனிமனித ரீதியாகவும் மூட நம்பிக்கைகளையும், தேவையற்ற நம்பிக்கைகளையும் எதிர்த்தவர். அந்த ஆத்மாவுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றால், பொய் பிரச்சாரங்களை தூரப் போடவேண்டும். இன்னும் சொல்லப்போனால், கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வுதான் விவேக் அவர்கள் நமக்கு அளித்த கடைசி மெசேஜ்.  தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பினால் பொது சுகதாரச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். சமூக ஊடகங்களில் தவறான கருத்தை பதிவிட்டால் சைபர் கிரைம் பிரிவின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படும்" என்று தெரிவித்தார். 



மறைந்த நடிகர் விவேக்


 


மேலும், "அதிமுக்கியமான காலகட்டத்தில் உள்ளோம். கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. கொரோனா நோய்த் தொற்றுக்கு விஞ்ஞான ரீதியிலான பதில் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் 77 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி நிர்வகிக்கப்பட்டுள்ளது. அதில், மிக மிகக் குறைவனான நபர்களுக்கு மட்டுமே சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன. 200 நாடுகளில் 175 நாடுகளில் கொரோனா தடுப்பூசி கிடைக்காத நிலை உள்ளது" என்று தெரிவித்தார். 



கொரோனா வைரஸ் - காட்சிப்படம் 


 


அதேபோல ஊரடங்கு பற்றி வரும் தவறான தகவல்கள் கண்டனத்திற்குரியது என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். குரூரமான மனப்பான்மை உள்ளவர்களால்தான் இத்தகைய வதந்திகளை பரப்ப முடியும். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். இதற்கிடையே, கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். 


புதுக் கட்டுப்பாடுகள் இன்று மீண்டும் அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஆணையர், "முழுமையான ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை. ஆனால், தீவிரமான கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம். திருமண நிகழ்வுகள், உணவகங்கள், போக்குவரத்து போன்றவைகளில் சில கட்டுப்பாடுகளை எதிர்பார்க்கலாம்" என்று தெரிவித்தார். முன்னதாக, கோவிட்-19 பரவலை தடுக்கும் விதமாக, கடந்த 10-ஆம் தேதி முதல்  தமிழகத்தில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு  தமிழக அரசு தடை விதித்தது. அதன்படி, மாவட்டங்களுக்கு இடையே அரசு பொது மற்றும் தனியார் பேருந்துகளிலும், சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளிலும் பயணிகள் நின்று செல்வதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. காய்கறி, மளிகை கடைகள், அனைத்து வணிக வளாகங்கள், உணவகங்கள், தேநீர் கடைகளில் இரவு 11 மணி வரை 50 சதவீதத்தினர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.  திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களிலும் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநில அரசு அறிவித்தது. மேலும்,  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கடற்கரையில் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. 



கொரோனா ஊரடங்கு


 


சென்னையில் கோவிட் 19 குறித்த பரிசோதனையை நாளொன்றுக்கு 25 ஆயிரமாக அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தொற்றால்  பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதன் காரணமாக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் அதிக அழுத்தத்துக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது. கோவிட்-19 தொடர்பான சந்தேகங்களுக்கு 044 4612 2300 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.