காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக, காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 60,000 கனஅடி வரை இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து முழுவதுமாக குறைந்தது. தொடர்ந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 800 கன அடி மட்டுமே நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. இதனால் ஒகேனக்கல்லில், காவிரி ஆறு வறண்டு நீரின்றி வெறும் பாறைகளாக காட்சியளித்து வந்தது.
இந்நிலையில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அஞ்செட்டி, தளி, ஒகேனக்கல் வனப் பகுதி உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனையடுத்து இன்று காலை காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு வினாடிக்கு 800 கன அடியாக இருந்த நீர்வரத்து, வினாடிக்கு 4,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாறைகளை மூழ்கடித்துவாறு தண்ணீர் செல்கிறது. மேலும் ஒகேனக்கல் மெயினருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து மழை அதிகரித்தால் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் தற்பொழுது வினாடிக்கு 4,000 கனஅடி தண்ணீர் வருவதால், சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை நம்பியுள்ள, பரிசல், மசாஜ், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை காலம் தொடங்கியுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறக்காமல், கர்நாடகா அரசு மெத்தனம் காட்டி வருகிறது. எனவே தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் மூலம் தமிழகத்திற்கு, கடந்த நான்கு மாதங்களாக திறக்க வேண்டிய தண்ணீரைப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.