வானத்தைப் போல திரைப்படத்தில் ஹோட்டலுக்குவரும் சன்னியாசியிடம் டேய் சாமிக்கு ரெண்டு இட்லி கட்டிகுடு, டேய் சாமிக்கு மெதுவடை, மசால் தோசை சேர்த்து குடு, டேட் சாமிக்கு வெண்பொங்கல் கெட்டிச்சட்னி சேர்த்து குடு என்பார் செந்தில். ஆனால் கடைசி வரை ஒன்றுமே வராது. இந்த காமெடி யாருக்குப் பொருந்துமோ இல்லையோ தமிழ்நாடு காவல்துறைக்கு பொருந்தும். நெல்லையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் அருணாச்சலம், தான் ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக தூங்கி 10 ஆண்டுகள் ஆகி விட்டது. அன்பு மகளுடன் 10 நிமிடம் விளையாட கூட நேரம் இல்லை. தனக்கு மன அழுத்தம் அதிகமாகி எனது உயிர் மூச்சு நின்று விடலாம் என்று தன் மனக்குமுறலை கொட்டித் தீர்த்து ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். உண்மையில் அந்த காவல்துறை அதிகாரி மனம் திறந்து கொட்டிவிட்டார். மற்றவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் புழுங்கி கொண்டிருக்கின்றனர்.
ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பல துறைகள் அதன் ஆரம்ப காலங்களில் இருந்ததைவிட பல படிகள் முன்னேறிவந்துவிட்டாலும், முன்னேறாமல் ஆங்கிலேயேர் கால அடிமை முறையிலேயே இயங்கி கொண்டிருக்கின்றது காவல்துறை. மிகைப்படுத்தலெல்லாம் இல்லை உண்மை அதுதான். ஆள்கள் என்னதான் வாட்டசாட்டமாக, அதிகார தோரணையில் இருந்தாலும் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் பணிச்சுமை மிக அதிகம். கிரேடு 1, கிரேடு 2, பெண் காவலர்களின் நிலமை இன்னும் மோசம். மெமோ, சார்ஜ், சஸ்பென்சன்களுக்கு பயந்து பல காவலர்கள் வாய் திறக்காமல் இருக்கின்றனர். குறைகளை தீர்க்கவோ அல்லது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவோ மற்ற துறையினருக்கு சங்கங்கள் இருந்தாலும் காவல்துறைக்கு மட்டும் இதுவரை சங்கம் இல்லை. மற்ற எல்லா துறையினருக்கும் 8 மணி நேர வேலை, வாரத்தில் ஒருநாள் விடுமுறை என்ற வசதி காவல்துறைக்கு இதுவரை வாய்க்கவே இல்லை.
அதுவும் கொரோனா காலம் இவர்களது பணிச்சுமையை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. காவல் துறையினரின் குறைகளை தீர்க்க மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட ஆணையம் அமைக்க வேண்டும் என்று 2012ஆம் ஆண்டு உயர் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. காவலர் நலன் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டில் விசாரணைக்கு வந்தபோது காவலர்களுக்கு 8 மணி நேர வேலை, வாரத்தில் ஒருநாள் விடுமுறை குறித்து நீதிபதி கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, காவல்துறை பணி அத்தியாவசியத் சேவையின் கீழ் வருவதால் சரியான விடுமுறை தினத்தை நிர்ணயிக்க முடியவில்லை எனக் கூறியிருந்தது.
பின்னர், 2019 ஆம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பிரியா தலைமையில் நான்காவது காவல் ஆணையத்தை அமைத்தது தமிழ்நாடு அரசு. ஆணையத்தின் உறுப்பினர்களாக வேடசந்தூர் எம்எல்ஏ பரமசிவம், முன்னாள் இணைச் செயலாளர் அறச்செல்வி, ஏடிஜிபி வெங்கட்ராமன் ஆகியோரை நியமித்திருந்தது. திமுக ஆட்சிகாலத்தில் 1969, 1989, 2006 ஆகிய ஆண்டுகளில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், 4 ஆவது ஆணையம் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் எந்த சீர்திருத்தங்களோ, குறைகளோ நிவர்த்தி செய்யப்படவில்லை. காவல் துறையினரின் கோரிக்கைகள் அப்படியே தான் இருந்தன. இந்த நிலையில் தான், காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கப்பட வேண்டும். அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக டிஐஜிக்கள் கண்காணிக்க வேண்டும் என்று கடந்த 2020 நவம்பரில் டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த உத்தரவு வெறும் உத்தரவாகவே இருந்தது. செயல்படுத்தப்படவே இல்லை. திமுக ஆட்சிக்குவந்தால் காவல்துறையினரின் குறைகள் தீர்க்கப்படும். வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும். ஆணையம் அமைக்கப்பட்டு அவை அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் அவைகள் நடைமுறைபடுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த நிலையில் தான் வாரம் ஒருநாள் விடுமுறை, திருமணம் மற்றும் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு விடுமுறை, விடுமுறை எடுக்காதவர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கையை கடந்த ஜூலை மாதம் அனுப்பினார் டிஜிபி சைலேந்திரபாபு.
காவல்துறை தரப்பில் விசாரித்தால், இந்த சுற்றறிக்கைகளையெல்லாம் கேட்டு கேட்டு அயற்சியாகிவிட்டது. இந்த அறிக்கைகள் அறிக்கைகளாகவே தான் இருக்கிறது. எதுவும் நடைமுறைபடுத்தப்படுவதில்லை என்று வருத்தம் தெரிவிக்கும் காவலர்கள், வாரம் ஒருநாள் விடுமுறையை கொடுத்தாலே கூட போதும் என்கின்றனர். காவல்துறை மற்ற துறைகளைப்போல இல்லை. அரசு ஊழியர்களுக்கு 2 நாள் விடுமுறை கிடைக்கிறது. காவல்துறையினர் ஒருநாள் விடுமுறை எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், குடும்பத்தை கவனிக்காமல் ஒருநாள் கூட விடுமுறையில்லாமல் 24 மணி நேரமும் அவர்கள் பணிபுரிகின்றனர். இதுவே, சில நேரங்களில் அவர்கள் கோபத்துடன் பணிபுரிய காரணமாக உள்ளது. வேலைபளு, மனஅழுத்தம், மன உளைச்சல் காரணமாக காவல்துறையிலிருந்து 6,800 பேர் விலகியிருக்கின்றனர். ஆணையமும் நீதிமன்ற உத்தரவுப்படி இல்லை என்று கூறிய உயர்நீதிமன்றம் 3 மாதத்திற்குள் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும், 8 மணி நேரம் தான் வேலை என்று 3 ஷிப்ட்களில் பணிபுரிய அனுமதிக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.காவல்துறையின் கையில் தான் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு எல்லாமே இருக்கிறது. முதலமைச்சரின் கையில் காவலர்களின் நலன் இருக்கிறது. காவலர்களின் நலன் காக்கும் அரசாக இருக்கும் என்று கூறியதன் அடிப்படையில் அவர்கள் கேட்கிறார்கள். லீவு எப்போது தருவீர்கள் முதல்வரே?