ஜிஎஸ்டி அமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த ஜிஎஸ்டி மன்றத்தின் நிலைக்குழு உறுப்பினராக தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்த பிடிஆர், "ஜிஎஸ்டி அமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த ஜிஎஸ்டி மன்றத்தின் நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. ஒன்றிய நிதியமைச்சர் மற்றும் கவுன்சிலுக்கு எனது நன்றிகள்!. வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்களையும் என்னையும் தமிழ்நாட்டில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பணியாற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் சொல்லியிருந்தார். தற்போது இந்திய அளவிலான செயல்முறையை மேம்படுத்த நண்பர்கள் மற்றும் சக உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறேன்” என்று பதிவிட்டார்.
வரித்துறை அதிகாரிகளுக்கு ஜிஎஸ்டி அணுகலை எளிமைப்படுத்துவதற்கான, நவீனப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வகுப்பது; ஜிஎஸ்டி முறையின் கீழ் வருவாய் இழப்பை தடுத்திடும் வகையில் தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பில் மாற்றம் கொண்டு வருவது, ஒழுங்குமுறை பின்பற்றுதல், நிதியாதாரங்களைப் பெருக்குதல் செயல்படுத்துவதற்கு தரவுகளைக் கொண்டு விரிவான பகுப்பாய்வு பணியை தொடங்குவது; மாநில, மத்திய அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான கட்டமைப்பை உருவாக்குவது போன்ற நோக்கங்களை இந்த குழு கொண்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தக் குழுவில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஹரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த சவுதாலா, அசாம் மாநில நிதியமைச்சர் அஜிதிங் நியோங், சத்தீஸ்கர் மாநில வர்த்தக அமைச்சர் டி.எஸ்.சிங் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ஒடிசா மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் பிடிஆர், "சிறிய அளவில் வரி செலுத்துவோர் மீது ஜிஎஸ்டிக்கு இணங்கும் சுமை சமமற்ற வகையில் ஏறியுள்ளது. இதற்கு தெளிவற்றதன்மையும் போதிய தொழில்நுட்பம் இல்லாததும்தான் காரணம். என் கலந்துரையாடல்களின் போது, ஜிஎஸ்டி வரி செலுத்துவோர், குறிப்பாக சிறு வர்த்தகர்கள், தங்கள் பயனர் கணக்குகளை பயன்படுத்துவதில் உள்ள சிரமத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினர்.
GSTN தளத்தில் அனைத்து உள்ளடக்கமும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதே அதற்கு காரணம். இதன் வினைவாக, சிறு வணிகர்கள் "வரி ஆலோசகர்களின்" சேவைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது அவர்களின் செலவை அதிகரிப்பதோடு, அவர்களின் வரிக்கணக்குகளை சமர்பிப்பதில் முழு கட்டுப்பாடு இல்லாத நிலையும் ஏற்படுகிறது. தமிழ்நாடு வணிகத்திற்கு உகந்த மாநிலமாக உள்ளது. பெரிய & சிறு குறு வணிகர்கள் என அனைவருக்கும் ஆதரவான சூழலை வழங்க விரும்பும் மாநிலம். தமிழ்நாடு GST அமல்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் சேவைகளை தமிழ் மொழியில் வழங்க எந்த கணிசமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. ஜிஎஸ்டி தொடர்பான சேவைகளை தமிழ் வழியில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை எங்கள் அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது. எனவே, சேவைகளை தமிழில் விரைவாக வழங்க GSTN-க்கு உத்தரவிடுமாறு இந்த மாமன்றத்தை வலியுறுத்துகிறோம். படிவங்களையும் & தளம் சார்ந்த விவரங்களையும் மொழிபெயர்க்க உதவுவதாக ஏற்கனவே GSTN இடம் அறிவித்துள்ளோம். இவ்விஷயத்தில் நேர்மறையான ஒரு பதிலை GSTN இடம் இருந்து எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.