புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் அறிவிக்கப்பட்ட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து துறை வாரியான ஆலோசனை கூட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.
வரும் 12ஆம் தேதிக்குளாக இந்த ஆய்வுக் கூட்டங்களை முடித்து ஜூலை மூன்றாவது வாரத்திற்குள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக சட்டபேரவையை கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் உரையுடன் 16ஆவது சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக துறைவாரியான செலவுகளுக்கு பேரவையின் ஒப்புதலைப்பெற மானியக் கோரிக்கைகளும் சட்டபேரவை கூட்டத் தொடரின் விவாதங்களின் போது எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
வேளாண்மைத்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஆளுநர் தனது உரையில் அறிவித்துள்ள நிலையில், இதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனிடையே ஒவ்வொரு அரசுத் துறைகளின் செயல்பாடுகள், மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள், கொள்கை விளக்க குறிப்புகள் ஆகியன குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தினமும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினத்தில் பள்ளிக்கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலா பாண்பாடு ஆகிய துறைகள் குறித்த ஆலோசனை கூட்டஙக்ளில் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். ஏற்கெனவே நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட மிகப்பெரிய துறைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டஙக்ளை நடத்தி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கக்து.
நேற்றைய தினம் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் சுற்றுலா மூலம் வருவாய் பெருக்கத்தை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழக அரசின் வருவாய் சமீப காலங்களாக குறைந்து வரும் நிலையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வருவாய் ஈட்டுவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஒருங்கிணைந்த சுற்றுலா பெருந்திட்டம், சுற்றுலாகளை வகைப்படுத்தி சர்வதேசத் தரத்திற்கு வகைப்பட்டுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
துறை வாரியான ஆய்வுக்கூட்டங்களை ஜூலை 12ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்காக பேரவை கூடும் தேதி வரும் ஜூலை 5ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு பிறகு மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பேரவை கூட்டத் தொடரை 20 முதல் 25 நாட்களுக்கு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் 503 வாக்குறுதிகளை அளித்துள்ள நிலையில் அதில் 200க்கும் அதிமான வாக்குறுதிகளை மாநில அரசே முழுமையாக நிறைவேற்றுவதற்கான முழு அதிகாரம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குதல், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகள் குறைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு 100 ரூபாய் மானியம் வழங்குதல் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த நிலையில் இது குறித்த அறிவிப்புகள் தற்போதைய நிதி மற்றும் கடன் சூழ்நிலையில் தற்போதைக்கு இடம்பெற வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.