சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
15 கிலோ எடை கொண்ட வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.825ல் இருந்து ரூ.850 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ரூ.25 உயர்ந்துள்ளது. அதேபோல 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ரூ. 84.50 அதிகரித்து ரூ.1687.50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சிலிண்டரின் விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பல அரசியல் தலைவர்களும் சமையஸ் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சமையல் எரிவாயு விலையுயர்வு எல்லையைத் தாண்டுகிறது. தனது சாதனையைத் தானே முறியடிக்கிறது. நேரடியாக மக்கள் வயிற்றில் அடிக்கிறோம் எனும் ஓர்மை மத்திய அரசுக்குத் துளியும் இல்லை. எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது?’ எனப் பதிவிட்டுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது சமையல் எரிவாயு விலையையும் உயர்த்துவது வழக்கம். அதன்படி, பிப்ரவரி மாதத்தில் இருந்து எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி 4ஆம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15ஆம் தேதி 50 ரூபாயும், மறுபடியும் பிப்ரவரி 25ஆம் தேதி 25 ரூபாயும், மார்ச் மாதம் 1ஆம் தேதி 25 ரூபாயும் உயர்த்தப்பட்டன. ஒரு மாதத்திற்குள் 125 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டன.
ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை, சமையல் எண்ணெய் விலை உயர்வால் தவித்து வரும் பொதுமக்களுக்கு சிலிண்டர் விலை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மக்களின் அத்தியாவசியத் தேவையாக உள்ள பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது அவர்களின் வாழ்வாதாரத்தையே சிக்கலுக்கு உள்ளாக்கி வருகிறது. கொரோனா காலத்தில் ஏற்கெனவே பொருளாதார ரீதியாக நொந்துபோகியுள்ள மக்களுக்கு இந்த விலையேற்றம் மேலும் பளுவைக் கொடுத்துள்ளது.
LPG price | மேலும் உயர்ந்த சமையல் சிலிண்டர் விலை : விழிபிதுங்கும் பொதுமக்கள்..!