”U are under arrest”, என்று போலீசார் சொல்லும் போது.. ”ஐயோ நெஞ்சு வலிக்குதே” என்று அவசரமாக hospital-க்கு ஓடும் அரசியல்வாதி கதாப்பாத்திரங்களை பல தமிழ் சினிமாக்களில் பார்த்திருப்போம். நிஜத்தின் நிழல் தானே சினிமா… ரெய்டு.. ஊழல் புகார்.. பாலியல் குற்றச்சாட்டு.. கொலை வழக்கு இப்படி பல குற்றச்சாட்டுகளால் வழக்குகளில் சிக்கி சிறைக்கு செல்லும் நேரத்திலோ, சிறை சென்ற பிறகோ உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்ற தலைவர்களின் சில கதைகள் இதோ…
1999ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த சமயம்.. தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது டான்சி வழக்கு. அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை நிர்ணயிக்கப்பட்டதை விட குறைந்த விலைக்கு விற்றதாகவும், இதனால் அரசுக்கு 3 கோடியே 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஜெயா பப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை பயன்படுத்தி ஜெயலலிதாவே அரசு நிலத்தை தன்வசப்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஊரக தொழில் துறை அமைச்சர் முகமது ஆசிப் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காரணம் கூறிய நிலையில், நீதிபதி மருத்துவமனைக்கே நேரில் சென்று அவரிடம் குற்றச்சாட்டை பதிவு செய்த சம்பவம் அரங்கேறியது.
அடுத்ததாக இந்தியாவின் தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கதை..
2010ம் ஆண்டு மோடி முதலமைச்சராக இருந்த குஜராத் அரசில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார் அமித்ஷா. அந்த காலகட்டத்தில் தான் நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்தது சொராபுதின் என்கவுண்ட்டர் வழக்கு. மோடியை கொல்ல சதி செய்ததாக நடந்த அந்த எண்கவுண்டர் போலியானது என்று குற்றம்சாட்டப்பட்டது. வழக்கின் முக்கிய குற்றவாளி என்று கூறப்பட்டு அமைச்சர் அமித்ஷா கடந்த 2010ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் விசாரணைக்காக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்த நிலையில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். அதனால் அவருக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கண்ணில் எரிச்சல் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறுதியில் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
நாட்டையே உலுக்கிய மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, 2017ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சில தினங்களிலேயே சிறைக்குள் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் பிர்சா முண்டா சிறையிலிருந்து அவர் ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக், பார் மற்றும் உணவகங்களில் இருந்து மாதந்தோறும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டில் 2021-ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணையில் இருந்த அவரை மற்றொரு ஊழல் வழக்கிலும் விசாரிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு மும்பை ஜே.ஜே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். பணமோசடி வழக்கில் 2022ம் ஆண்டு அமலாக்கத்துறையால் இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் உடல்நலக் குறைவால் அவதிப்படுவதாக கூறி ஜாமின் கேட்டு நீதிமன்றத்தை நாடினார். உடல்நலக் குறைவால் சிறையிலேயே கீழே விழுந்ததாகவும் தகவல் வெளியானது. அதன்பிறகு மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு கடந்த மாதம் தான் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ராவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த நவாப் மாலிக் 2022ல் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அவருக்கு சுமார் ஒரு வாரம் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. ஆனால் உடல்நலக் கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து குணமாகி வெளியில் வந்த நிலையில் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்ட நவாப் மாலிக் இன்னமும் சிறையிலேயே உள்ளார்.