அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது இந்திய தேர்தல் ஆணையம். இதையடுத்து இரட்டை இலை சின்னம் அவர் வசமானது.
அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்:
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ”தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநில கட்சியாக உள்ள அதிமுகவிற்கு குறிப்பிட்ட பகுதிகளில் தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெறும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க அதிமுக சார்பில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று அதிமுக சார்பில் கர்நாடாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் அறிக்கை அதிமுக பொதுச்செயலாளருக்கும் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈபிஎஸ்-க்கு அங்கீகாரம்:
முன்னதாக அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருப்பதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. தற்போது இரட்டை இலை சின்னத்தை அதிமுகவிற்கு ஒதுக்கியுள்ளது தொடர்பான தேர்தல் ஆணைய கடிதத்தில், பொதுச்செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது உறுதியாகியுள்ளது. அதேநேரம், இந்த முடிவானது நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
கர்நாடக தேர்தலில் அதிமுக:
அதிமுக பொதுக் குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வாகி இருந்தாலும் கூட தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருந்து. இதனால், ஓபிஎஸ் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றே அடையாளப்படுத்தி வந்தார். இதனிடையே தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் நோக்கில், கர்நாடகாவில் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் புலிகேசி நகரில் கர்நாடகா மாநில அதிமுக அவைத் தலைவரான அன்பரசனை, வேட்பாளராக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு போட்டியாக, புலிகேசி தொகுதியில் அதிமுக சார்பில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என ஓபிஎஸ் அறிவித்தார். அதைதொடர்ந்து, கோலார் தங்க வயல் தொகுதியில் அனந்தராஜ், காந்தி நகர் தொகுதியில் குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என அறிவித்தார்.
இந்நிலையில் தான், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் கட்சி மற்றும் சின்னம் ஆகிய இரண்டுமே, ஈபிஎஸ் வசம் ஆகியுள்ளது. அதேநேரம், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு நீதிமன்ற தீர்ப்புகளுக்கு உட்பட்டது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.