2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. செப்டம்பர் 16 ஆம் தேதி வரை பொங்கல் பண்டிக்கைகான ரயில் டிக்கெட் முன்பதிவு இருக்கும் என்பதால் பொதுமக்கள் தங்களது பயணத்தை திட்டமிடும்படி ரயில்வே சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 


பொதுவாக பண்டிகை காலம் என்றாலே வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினருடன் நண்பர்கள் சூழ கொண்டாடுவார்கள். அதற்கு மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்வது வழக்கம். பேருந்து, விமானம் என பல போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் விரும்புவது ரயில் தான். ரயிலில் எந்த தொந்தரவும் இல்லாமல், பாதுகாப்பாக, அலைச்சல் இல்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என்ற காரணத்தால் மக்கள் ரயிலில் செல்ல விரும்புகின்றனர். மேலும் விமானம் மற்றும் பேருந்து ஆகிய போக்குவரத்து சேவைகளில் கட்டணம் அதிகம் என்பதாலும் மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். 


பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் மக்கள் வேலைக் காரணமாக தலைநகர் சென்னையில் வசித்து வருகின்றனர். ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். நடப்பாண்டு அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக வரும் தீபாவளி வரும் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி சில நிமிடங்களில் அனைத்து வகுப்பு டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.


அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கி (செப்டம்பர் 13) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் நேற்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. முதல் நாளான நேற்று டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் காலியானது. இரண்டாவது நாளான இன்றும் 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையானது. 



  • ஜனவரி 11 (வியாழக்கிழமை) செல்ல நினைப்பவர்கள் நேற்று (செப்டம்பர் 13) முன்பதிவு செய்திருக்க வேண்டும்

  • ஜனவரி 12 (வெள்ளிக்கிழமை) செல்ல நினைப்பவர்கள் இன்று (செப்டம்பர் 14) முன்பதிவு செய்யலாம்

  • ஜனவரி 13 (சனிக்கிழமை) செல்ல நினைப்பவர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

  • ஜனவரி 14 (ஞாயிற்றுக்கிழமை) பயணம் மேற்கொள்பவர்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பொதுமக்கள் சிரமமின்றி, கடைசி நேர சிக்கலை தவிர்க்க தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் பேருந்து, விமானம் அல்லது சொந்த வாகனம் மூலம் பயணம் மேற்கொள்வார்கள். ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிக்கைக்காக குறைந்தபட்சம் 7 லட்சம் மக்கள் சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்வது வழக்கம். 


OTT release this week : இந்த வீக் எண்டு என்ன படம் பார்க்கலாம்... ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?