நெல்லையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு நெல்லையில் இரண்டாயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊர் புற மருத்துவனைகள் என்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும் இந்த முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய் உள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். முகாமுக்கு வருபவர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பொதுமக்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்த தினசரி முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 60,000 பேருக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 8000-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2000 பேர் நெல்லை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். மக்கள் காலை முதலே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக வருவதை காண முடிந்தது.