கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமையான நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே கடந்த 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில், விடுமுறை நாளான நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தபோது நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் பல்வேறு மாநிலங்களும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில், தமிழ்நாட்டிலும் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.



வெளியே வந்தால் வழக்கு ; வாகனம் பறிமுதல்


ஊரடங்கின்போது விதிகளை மீறி வெளியேவருவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஸ், கார், பைக், என எந்த தனியார் வாகனங்களும் நாளை இயங்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மருந்தகங்களை தவிர எந்த கடையும் இயங்கக் கூடாது


மருத்துவமனைகள், மருந்தகங்களை தவிர காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் என எல்லா கடைகளும் அடைக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும், மீறி திறக்கும் கடைகள் சீல் வைக்கப்படும் என கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுளது. அதேபோல், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் என டாஸ்மாக் மதுபான கடைகள் என எதுவும் திறப்பதற்கு அனுமதி இல்லை.


உணவங்கங்கள் இயங்கும்


காலை 6 மணிமுதல் 10 மணிவரையும், நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரையும்,, மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரையும் உணவகங்கள் திறந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் மட்டும் வாங்கிச் செல்லலாம்.


பால், பத்திரிகை கிடைக்கும்


காய்கறி கடைகளில் இருந்து மீன் மார்க்கெட் வரை மூடப்பட்டாலும் அத்தியாவசியமாக தேவைப்படும் பால் விற்பனை நிலையங்கள் செயல்பட தடையேதுமில்லை. அதேபோல், தினசரி பத்திரிகை விநியோகம் செய்வோருக்கும் கட்டுப்பாடுகளுடன் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


யார் யார் எல்லாம் செயல்படலாம் ?


செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள பத்திரிகையாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், விவசாய விளைபொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களை ஓட்டுவோர் உரிய அடையாள அட்டையுடன், மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை பின்பற்றி வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.


திருமணம் / இறுதி சடங்குக்கான கட்டுப்பாடுகள்


ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட திருமணங்கள் நாளை நடைபெறுவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் திருமண நிகழ்ச்சியில் 100 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இறுதி சடங்கில் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுக்கு செல்வோர் அந்த திருமணத்திற்குரிய பத்திரிகையை கையில் எடுத்துச்செல்லும் பட்சத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்படமாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.



மாநிலம் முழுவதும் சோதனைச் சாவடிகள்


அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வெளியே வருவோரை தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும், வழக்குப்பதிவு செய்வதற்கும் மாநிலம் முழுவதும் காவல்துறையினரும், வருவாய் துறையினரும் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். அதற்காக சாலைகளில் ஆங்காங்கே தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



வீட்டிலேயே இருங்கள் ; பாதுகாப்பாய் இருங்கள்


கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து, முழு ஊரடங்கை வெற்றிகரமாக செயல்படுத்தினால் மட்டுமே, கொரோனா என்ற பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியும். எனவே, பொதுமக்கள் நாளை அரசின் அறிவிப்பின்படி, வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொரோனாவை கட்டுப்படுத்த தங்களது பங்களிப்பை தரவேண்டும்.