மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் சில தினங்களாக மின்பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், தமிழ்நாட்டில் மின் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் விளக்கமளித்தார்.


தமிழ்நாட்டில் மின்வெட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்ப்பு கொண்டு வந்தார். இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 17,500 மெகாவாட் மின்தேவை இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி என்பது 12 ஆயிரம் மெகாவாட்  என்ற அளவில்தான் இருக்கிறது. கோடை காலத்தில் மின் தேவை அதிகமாக உள்ளது என்பதை அறிந்து நிலக்கரியை சேமித்து வைக்க அரசு தவறிவிட்டது. சமீப காலமாக ஏற்படும் மின்வெட்டால் விவசாயிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. நகர்ப் பகுதியிலும் அதிகளவில் மின்வெட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, மின்வெட்டை சரிசெய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுகிறேன்” என்று கூறினார்.


 






இதன்பிறகு மின்வெட்டு குறித்து இபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து பேசினார். அதில், “கடந்த 18ஆம் தேதி  தமிழகத்தின் ஒருநாள் மின் நுகர்வு 317 மில்லியன் யூனிட்டாக இருந்த நிலையில் நேற்று 363 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. குறுகிய கால ஒப்பந்த மூலம் 3,000 யூனிட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து வருகிறோம். மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் தடைப்பட்டதால்தான் மின்வெட்டு ஏற்பட்டது. சீரான மின்விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஒருநாள் நிலக்கரி தேவை 72,000 டன்னாக இருந்த நிலையில் 48,000 முதல் 50,000 டன் வரையிலான நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வந்தது. இந்த நிலையில் அதனை  மத்திய அரசு படிபடியாக குறைத்துவிட்டது. மத்திய தொகுப்பில் இருந்து வர வேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் இந்த நிமிடம் வரை நமக்கு கிடைக்கவில்லை. மின்பற்றாக்குறையால் வெறும் 41 இடங்களில் மட்டுமே மிட்வெட்டு நிலவியது. கடந்த அதிமுக ஆட்சிகாலத்திலும் இதே போல் 68 முறை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் 5% கூட சொந்த மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. அதிமுக ஐடி விங் மூலம் இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டும் விஷம பிரச்சாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் செய்து வருகிறார்” என்றார்.


 






 






இதனைத்தொடர்ந்து, மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கத்தை ஏற்கமறுத்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண