மாதவரம் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகர் 5வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ரவி(52). சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்திவருகிறார். அவரது மனைவி கலைவாணி(47) வீட்டு பணிகளை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் பெயிண்ட் அடிக்க முடிவு செய்து பாபு என்பவர் மூலம் அதற்கான பணிகள் நடந்துள்ளது. அப்போது, வீட்டுக்காவல் மற்றும் வீட்டு பணிகளுக்கு ஆட்கள் இருந்தால் கூறுமாறு கடந்த 15 நாட்களுக்கு முன் பாபுவிடம் கலைவாணி கூறியுள்ளார்.
தனக்கு தெரிந்த பெங்களூருவைச் சேர்ந்த ராகேஷ் என்பவரை கலைவாணிக்கு பாபு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மனைவி ரேவதி மற்றும் இரு குழந்தைகளுடன் தன்னை அறிமுகம் செய்து கொண்ட ராகேஷ், கலைவாணி வீட்டில் தங்கி பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளார். அங்கு அவர்களுக்கு தங்க இடம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் பணிநிமித்தமாக வெளியூர் சென்றிருந்த ரவி, நேற்று முன்தினம் இரவு திரும்பியுள்ளார்.
திறந்திருந்த வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது அதிர்ந்து போனார் ரவி. மனைவி கலைவாணி கை, கால் கட்டப்பட்ட நிலையில், தலையில் அடித்து கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் வீட்டில் இருந்த 10 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை உறுதிபடுத்தினர். அது மட்டுமின்றி ராகேஷ் குடும்பத்துடன் தலைமறைவான நிலையில் அவர் தான் பணத்திற்காக இந்த கொலையை செய்திருக்க முடியும் என்கிற சந்தேகத்தில் அவரை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர்.
பாபுவிற்கு பெங்களூரு ராகேஷ் அறிமுகம் ஆனது எப்படி? பாபுவும்-ராகேஷூம் கூட்டாளிகளா? ராகேஷ் தந்த முகவரி உண்மையானதா? போன்ற கேள்விகளுக்கு விடை தேடி போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளனர். பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட காவலாளியே வீட்டு உரிமையாளரை கொலை செய்து தலைமறைவான சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு காவலாளிகளை நியமிக்கும் போது அவர்களின் சுய விபரங்களை சரிபார்த்த பின்பாக பணியமர்த்த வேண்டும் என்கிற விழிப்புணர்வை இந்த கொலை உணர்த்தியுள்ளது.