இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர்கள் தாக்கல் செய்துள்ள சொத்துக்கணக்கு விவரம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. தமிழகத்தின் 5 முறை முதல்வராக பொறுப்பு வகித்த, கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலினின் அசையும் சொத்து 4,94,84,792 ரூபாய் மட்டும் என்றும், அசையா சொத்து ரூபாய் 2,24,91,410 ரூபாய் மட்டும் என்றும் தாக்கல் செய்துள்ளார். இவருக்கு சொந்தமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அகரத்திருநல்லூரில் 2.86 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாகவும், அதன் மதிப்பு 2,17,940 ரூபாய் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். 


காரே இல்லாத மு.க.ஸ்டாலின்


வேளச்சேரியில் உள்ள தனது வீட்டின் மதிப்பு 92.42 லட்சம் ரூபாய் என்றும், திருவாரூரில் உள்ள வீட்டின் மதிப்பு 17.50 லட்சம் மதிப்பு என்றும் சொத்துக்கணக்கு விவரத்தில் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினிடம் கையில் ரொக்கமாக ரூபாய் 50 ஆயிரமும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் ரொக்கமாக ரூபாய் 25 ஆயிரம் மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.




இந்த சொத்துக்கணக்கிலே மிகவும் அதிர்ச்சியான தகவல் மேயர், எம்.எல்.ஏ. உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் என்று பல்வேறு பதவிகளையும், தி.மு.க. இளைஞரணி செயலாளர், பொருளாளர், செயல்தலைவர் என்று பல்வேறு பதவிகளை வகித்து தற்போது தலைவர் பதவியை வகித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு சொந்தமாக ஒரு வாகனம் கூட இல்லை என்பதுதான். ஆனால், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த சொத்துக்கணக்கில், அவருக்கு ரூபாய் 1.77 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் கார் தனக்கு சொந்தமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


நிலமே இல்லாத விவசாயி முதல்வர்


மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்புதான் இப்படி என்றால், ஏழு முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, 4 முறை வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர், முதல்-அமைச்சர் பதவிகளை வகித்த எடப்பாடி பழனிசாமியின் அசையும் சொத்து 47.64 லட்சம் ரூபாய் என்றும், கையில் ரொக்கமாக ரூபாய் 6 லட்சம் மட்டுமே உள்ளதாகவும் சொத்துக்கணக்கில் குறிப்பிட்டுள்ளார். 


இதில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய விவகாரம் வார்த்தைக்கு வார்த்தை `நானும் விவசாயி, நானும் விவசாயி' என்று கூறி வரும் எடப்பாடி பழனிசாமி, தனக்கு சொந்தமாக வேளாண் நிலம் எதுவும் இல்லை என்று சொத்துக்கணக்கில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தன்னுடைய பெயரில் அசையா சொத்துக்களும் ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளார். 
ஆனால், தன்னுடைய மனைவி ராதா பெயரில் 6 ஏக்கர் நிலமும், தனது குடும்பத்தின் பெயரில் 15.65 ஏக்கர் நிலமும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரது மனைவி பெயரில் 1.78 கோடி அசையாத சொத்துக்களும், குடும்பத்தினர் பெயரில் 2.9 கோடி ரூபாய் சொத்துக்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 


 




ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது எல்லாம் முதல்வராக பதவிவகித்தவரும், தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த சொத்து மதிப்பும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவே உள்ளது. அவரிடம் அசையும் சொத்து 61.19 லட்சம் மட்டுமே உள்ளதாகவும், கையில் ரொக்கமாக 23,500 ரூபாயும், வங்கியில் 11.42 லட்சம் மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மு.க.ஸ்டாலினைப் போல தனக்கு சொந்த வாகனம் ஏதும் இல்லை என்று குறிப்பிடாமல், 48.85 லட்சம் மதிப்பிலான மூன்று வாகனங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் போல தனக்கும் எந்தவொரு அசையா சொத்துக்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 


மனைவியிடம் கடன் வாங்கிய ஓ.பி.எஸ்.


முக்கிய பிரமுகர்கள் தாக்கல் செய்த சொத்து விவரங்களிலே அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அவர்களின் கடன் தொகையே. 4 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவிவகித்து வரும் எடப்பாடி பழனிசாமி தனக்கு ரூபாய் 15 லட்சம் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். துணை முதல்வரின் கடன்தொகை விவரம் தான் கடும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
துணை முதல்வர் தனக்கு 65.55 லட்சம் கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் இந்த தொகையை யாரிடம் கடனாக பெற்றார் என்பது அதிர்ச்சிக்கு காரணம். துணை முதல்வர் இந்த 65.55 லட்சம் ரூபாயை தன்னுடைய மனைவி விஜயலட்சுமியிடமே கடனாக பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி தனக்கும், தன்னுடைய மகனுக்கும் சேர்த்து 3.77 கோடி ரூபாய் கடனாக அளித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மு.க.ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமாகிய உதயநிதி ஸ்டாலின் 21.13 கோடி ரூபாய்  அசையும் சொத்தும், 6.54 கோடி ரூபாய் அசையா சொத்தும், தன்னுடைய மகன் இன்பன் உதயநிதிக்கு 22 லட்சம் ரூபாய் சொத்தும் இருப்பதாக சொத்துக்கணக்கு தாக்கல் செய்துள்ளார்.  இவ்வளவு சொத்து மதிப்பு உள்ள உதயநிதி ஸ்டாலின், தனக்கு 1.35 லட்சம் கடன் தொகை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் சொத்து கணக்கிற்கும், அவர்களது சொகுசு வாழ்க்கை முறைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இருப்பது ஒவ்வொரு தேர்தலிலும் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரிகளும் அவர்களது சொத்துக்கணக்கு விவரங்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தால் மட்டுமே எத்தனை வேட்பாளர்களின் சொத்துக்கணக்கு உண்மையானது என்பது தெரியவரும்.