சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் அரசு விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பள்ளிகளுக்கு இடையிலான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கால்பந்து போட்டியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளது. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விளையாடி உள்ளனர்.
இறுதி போட்டியில் முதல் பாதியில் சரிவர விளையாடததால் ஆத்திரம் அடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை மாணவர்களை தரையில் அமர வைத்து கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், மாணவர்களை ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்துள்ளார். அப்போது, பள்ளி ஆசிரியர்களும் உடன் படிக்கும் ஏராளமான மாணவர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் கூனிக்குறுகி அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை செல்போனில் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆனால், இறுதி போட்டியில் 2-ம் பாதியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றனர்.
மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் தாக்கிய வீடியோ சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பகிரப்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர், உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். விளையாட்டுப் போட்டியில் சரியாக விளையாடாததால் மாணவர்களை, உடற்கல்வி ஆசிரியர் தாக்கிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.