முன்னாள் மத்திய அமைச்சர் மகன் துரை அழகிரிக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில் ,கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  


துரை தயாநிதி சிகிச்சை


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பேரனும் , முன்னாள் மத்திய அமைச்சர் திமுகவின் முன்னாள் பிரமுகராக வலம் வந்த அழகிரியின் மகன் துரை தயாநிதி , கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


இந்தநிலையில் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதி , வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாக , வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் துரை தயாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


காவல்துறை கட்டுப்பாட்டில்..


தொடர்ந்து மருத்துவக் குழு துரை தயாநிதி உடல் நலம் குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது சிஎம்சி மருத்துவமனையில், ஏ-பிளாக்கில் துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.


அவருடன் அவரது தந்தை அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். அவர் சிகிச்சை பெற்று வரும் தளம் காவல் துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.


மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டலா ?


இந்நிலையில், சிஎம்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று, வந்த ஒரு மின்னஞ்சலில் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடும் வகையில் , மின்னஞ்சல் வந்ததாக கூறப்படுகிறது.


இதையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிரண் ஸ்ருதிக்கு மின்னஞ்சல் வழியாகவே புகார் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. 


சைபர் கிரைம் போலீஸ் விசாரணை...


மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக வேலூர் மாவட்ட சைபர் கிரைம்  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . அதேநேரம், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் சிஎம்சி ஏ-பிளாக்குக்கு கூடுதலாக ஓர் உதவியாளர் தலைமையில் 3 காவலர்கள் சீருடை அணியாமல் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.


மேலும் சிஎம்சி மருத்துவமனை வளாகமும் காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.‌ தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதிக்கு திடீரென கொலை மிரட்டல் வந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


தொடர்ந்து காவல்துறை தரப்பில் விசாரித்த பொழுது : கொலை மிரட்டல் விடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பிற்காக போடப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கூடுதல் பாதுகாக்கப்பட்டுள்ளோம். இது தவிர தங்களுக்கு எதுவும் தெரியாது என போலீசார் தெரிவித்தனர்.