தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து காவிரி ஆற்றில் நீராட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.



காவிரி ஆற்றல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் புனித நீராட தலைவிதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்படும் என வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு தண்டோரா மூலமும், ஒலிப்பெருக்கி மூலமும், தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் வாயிலாகவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இன்று 03.08.2022 (ஆடி 18) ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு, காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொது மக்கள் புனித நீராட வேண்டும். மற்ற பகுதிகளில் நீராட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


 


எனவே, பொதுமக்கள் எவரும் மேட்டூர் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல்துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவேரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். குறிப்பாக, காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை எடுக்கப்பட்டது.



மேலும், காவிரி ஆற்றில் நீர் வரத்து நேற்று 51,000 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு 1,41,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீராக வினாடிக்கு 1,40,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து இந்த நேரத்திலும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.