தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாகவும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்களுக்கு, ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் பணி நீட்டிப்பு செய்யும் ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில், எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,472 செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி பணி நீட்டிப்பு ஒப்பந்தம் முடிந்த நிலையில், மீண்டும் நீட்டிப்பு செய்யப்படவில்லை. அவர்களை பணியில் இருந்து விடுவிப்பதற்கான அரசாணை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கிட வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை கலையாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200 மேற்பட்ட செவிலியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கொளுத்தும் வெயிலிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏட்டப்படாததால் செவிலியர்கள் போராட்டம் தொடர்ந்தது.



மூன்றாம் நாளாக செவிலியர்கள் போராட்டத்திற்கு பாமக, கம்யூனிஸ்ட், பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல கட்சியினர் மற்றும் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், நேற்று இரவு கைது செய்யப்பட்ட 150 க்கும் மேற்பட்ட செவிலியர்களை தனியார் மண்டபத்தில் இருந்து அதிகாலை 3 மணி அளவில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். செய்வதறியாது திகைத்த செவிலியர்களை காவலர்கள் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே அழைத்துச் சென்று மத்திய பேருந்து நிலையத்தில் விட்டனர். அப்போது போராட்டத்தை கைவிட்டு அவரவர் வீட்டுக்கு செல்லுமாறு காவல்துறையினர் கட்டாயப்படுத்தினார். இதன் காரணமாக செவிலியர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தேநீர் அருந்த கூட இடைவெளி விடாமல் நடந்தே அலைக்கழிக்கப்பட்ட காரணத்தினால் செவிலியர் ஒருவர் மயக்கம் அடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. செவிலியர்களை சேலத்தில் இருந்து விரட்டி அடிக்கும் நோக்கத்தில் குறியாக இருந்த காவல்துறையினர் போராட்டம் நடத்தினால் அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதனை எடுத்து வேறு வழியின்றி செவிலியர்கள் சேலத்தில் நடத்திய போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அவரவர் இல்லத்திற்கு கண்ணீர் விட்டபடி வருத்தத்துடன் சென்றனர். சேலத்தில் போராட்டம் கைவிட்டாலும் விரைவில் அடுத்த கட்ட போராட்டம் எங்கு நடைபெறும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.