தமிழ்நாட்டில் 12 இலக்க மக்கள் ஐ.டி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் தொழிற்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அறிவித்துள்ளார்.


சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் கூறுகையில்,  ”தரவுகளின் அடிப்படையிலான அரசாக இருப்பது இந்த நவீன உலகில் காலத்தின் கட்டாயம் ஆகியுள்ளது. எனவே, அதற்கான பணிகளின் தொடக்கமாகத்தான் மக்கள் ஐடி திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்க இருக்கிறது. (ஸ்டேட் பேஃமிலி டேட்டா பேஸ்) சமுதாய மறுமலர்ச்சிக்கான திட்டம் தான் இது. ஆதாரின் பயனையும் திட்டத்தினையும் மக்கள் ஐ.டி பயனும் திட்டமும் வேறு வேறு எனபதை புரிந்து கொள்ள வேண்டும். மாநில அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் வெளிப்படையாக கொண்டு செல்லவும், மக்களிடம் எளிய முறையில் திட்டங்களை கொண்டு செல்லவும் தான் இந்த திட்டம்” எனவும் கூறினார். மேலும் இதனால், அரசு ஒரு புதிய நலத்திட்டத்தினை வகுக்கும்போது அதற்கு தகுதியானவர்களின் எண்ணிக்கையினை எளிதில் கண்டறியவும் இந்த மக்கள் ஐ.டி திட்டம் உதவும் எனவும் கூறியுள்ளார்.


“இதற்காக தமிழ்நாடு மக்கள் எண் உருவாக்கப்படவுள்ளது. இது 12 இலக்க எண் கொண்ட ஐ.டி ஆக உருவாக்கப்படவுள்ளது. அப்போது, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகளை மேம்படுத்த தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோவை மதுரை திருச்சி சேலம் திருநெல்வேலி மற்றும் ஓசூரில் உள்ளிட்ட பகுதிகளில் எட்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. எல்காட் மதுரை மாவட்ட வடபழஞ்சி மற்றும் கின்னிமங்கலம் கிராமங்களில் 245.17 ஏக்கரில் ஒரு எல்கோசனையும்,  திருநெல்வேலி மாவட்ட கங்கைகொண்டானில் 200.04 ஏக்கரில் ஒரு எல்கோசெஸ்சை நிறுவியுள்ளது. அதேபோல்,  ஏற்காடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் விஸ்வநாதபுரம் கிராமத்தில் 124.04 ஏக்கர் பரப்பளவில் நிறுவியுள்ளது.


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பை ஏற்று 2030ல் எட்ட வேண்டிய 1 ட்ரில்லியன்  டாலர் மதிப்பிலான பொருளாதார  இலக்கை அடைய வேண்டுமென்ற நோக்கில் அனைவரும் உழைத்து கொண்டிருக்கிறோம். ஐ.டி தளங்களும் தொழில்நுட்ப சேவைகள் அமைப்பும் 18 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. திருநெல்வேலி, ஓசூர்,கன்னியாகுமரி மாவட்டங்களில் நிறுவனங்களை அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


ஐ.சி.டி அக்காடமி மூலமாக திறன்மேம்பாட்டு நிகழ்வுகளும் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே ஐ.டி நண்பன் என்னும் அமைப்பில் அரசு சார்ந்த நிகழ்வுகளுக்கான தொழிற்நுட்ப செய்திகளைப் பகிர்ந்து வருகிறோம். மேலும்,  அந்த அமைப்பில் முதல்நிலையில் தொழில் தொடங்க  விருப்பமுள்ள முனைவோர்கள் இணைய‌ அழைக்கின்றோம். தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் ஐ.டி துறை எப்போதும் முதல் நிலை தொழில் முனைவோருக்கு உதவுவதற்காக காத்திருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.