இந்திய ரயில்வே சமீபத்தில் நிதி ஆயோக் கீழ் ஒரு முக்கியமான பரிந்துரையை செய்தது. வர்தகம் மற்றும் இயற்கை வலம் மிகுந்த கிராமப்புறங்கள், தாலுகா மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ரயில் சேவை இல்லை என்றும்  இதற்கான மாவட்டங்களை கண்டறிந்து ரயில் சேவை அமல்படுத்த வலியுறுத்திருந்தது. அதன்படி முதல் கட்டமாக நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் எங்கெல்லாம் ரயில் சேவை இல்லை, ரயில்வே வரைப்படத்தில் விடப்பட்ட இடங்கள் எவை என்பதை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 132  மாவட்ட தலைநகரங்களில் ரயில் சேவை இல்லை என்பது கண்டறியப்பட்டது.


இந்த ரயில் போக்குவரத்து சேவைகளில் சரக்கு ரயில்களுக்கும் பயணிகள் ரயில்களும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் ரயில் சேவை தொடங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அதேபோல் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் மக்களின் கோரிக்கையை இந்திய ரயில்வே அமைச்சகத்திடம் முன்வைத்துள்ளார்.


பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் அரியலூரில் இருந்து நாமக்கல் வரை புதிய ரயில் பாதையை அமைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து இருந்தார். இந்த ரயில் பாதை பெரம்பலூர், துறையூர் வழியாக செல்ல வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்திலும் கோரிக்கை வைத்து, இது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதனை பரீசிலனை செய்த அமைச்சகம், ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இறுதி வழித்தடம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Location survey  ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அதாவது அரியலூர் பெரம்பலூர், துறையூரில் எந்த பாதையில் இந்த வழித்தடம் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.




116 கிமீ தூரம் கொண்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தருக்கு ரயில்வே அமைச்சகம் அனுப்பியுள்ளது.