CM Stalin: இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது,
”இலங்கை அதிபர், இந்தியாவிற்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை ளைப் பாதுகாத்திடவும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நியாயான கோரியப்ப்பளை நிறைவேற்றிடவும் இலங்கை அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வலியுறுத்திட வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (19- 7 -2023) கடிதம் எழுதியுள்ளார்.
இலங்ககை அதிபர், 2022-ம் ஆண்டு பதவியேற்றதற்குப் பிறகு முதன்முறையாக 2 நாள் பயணமாக புதுதில்லி வரவுள்ளார். தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் பூகோளரீதியான நெருக்கம் மற்றும் வரலாற்று பொருளாதார மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் காரணமாக நீண்டகாலமாக பல பிரச்சினைகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் , இலங்கை அதிபருடனான பேச்சுவார்த்தையின் போது, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் கவலையளிக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளான கச்சத்தீவை மீட்பது மற்றும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும், இலவ்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல் குறித்தும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் பேசி, தீர்வு காணுமாறு கோரியுள்ளார்.
மேலும், ”இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருவதாக ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நமது மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது, மாநிலத்தின் கடலோர கிராமங்களில் உள்ள மீனவ மக்களிடையே ஆழ்ந்த கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டு, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், ஒன்றிய அரசு தூதரக நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டுமென்று” தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
"2020 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய 48 தாக்குதல் சம்பவங்களில், 679 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 83 மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதன்காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களும் வருவாய் இழப்பினால் பாதிக்கப்பட்டதாகவும், ஒன்றிய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் 604 மீனவர்களையும் 16 படகுகளையும் இலங்கை அரசு விடுவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் மட்டும் 74 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதாகவும், அவர்களில் 59 பேர் விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு திரும்பியுள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டு முதல் 67 மீன்பிடிப் படகுகள் இலங்கைவசம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், சமீபத்தில் ஜூலை 9, 2023 அன்று 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த விவகாரத்தை வருகை தரும் இலங்கை அதிபரிடம் எடுத்துச் சென்று சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை நாட்டுடைமையாக்கும் சட்டத்தைத் திரும்பப் பெற தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்” என்றும் முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
"பொருளாதார உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் இலங்கையின் சமமான குடிமக்களாக, கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டியது அவசியமாகும் என்றும் இந்த நோக்கத்திற்காக, இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமான, உறுதியான தீர்வை எட்டுவதற்கு இலங்கை அதிபரை, மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் வலியுறுத்திட வேண்டுமென்றும்" முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
”மேற்குறிப்பிட்ட விவகாரங்களில் பிரதமர் மோடி தலையீடும், ஆதரவும், நமது மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் இலங்கையில் உள்ள தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உதவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இதன்மூலம் நமது மீனவர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், இலங்கையுடனான நமது வரலாற்று சிறப்புமிக்க இருதரப்பு உறவுகளை மேம்படுத்திடவும் இயலும்" எனத் தெரிவித்துள்ளார்.