முதல்வரும் மற்ற அமைச்சர்களும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதற்கு தடைவிதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைகிளை கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது


தமிழக அரசின் அலுவல் ரீதியான அறிவிப்புகள், நிகழ்த்தப்படும் உரைகள் போன்றவற்றில் ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராமசாமி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் திமுகவில் சுமார் ஒன்றரை கோடி பேர் உறுப்பினராக இருக்கும் நிலையில் அவர்கள் ஒவ்வொருவரிடமும் பிரிவினைவாதத்தை உண்டாக்கும் வகையில் இந்த செயல்பாடு அமைகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மற்றொரு ஜம்மு காஷ்மீர் சம்பவம் நிகழ வாய்ப்பாக போய்விடும் எனவே ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்த தடைவிதிக்கவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதையே கட்டாயப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறுதான் பேச வேண்டும் என எப்படி உத்தரவிட முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் முதல்வரும் மற்ற அமைச்சர்களும் இவ்வாறுதான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது என குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.