கொரோனா வைரஸ் தோற்றால் பெற்றோரை இழந்து பொருளாதார ரீதியில் தவித்து வரும் குழந்தைகளுக்கு உடனடி உதவித்தொகையாக 3 லட்சமும், குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வங்கி வைப்பு செலுத்தப்படும் என்றும், அந்த குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது அந்த பணம் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இருந்தும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகையை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகிறது.
தமிழக அரசின் அரசாணைப்படி தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள் நிவாரண உதவிகளைப் பெற வேண்டுமென்றால் அக்குடும்பத்தின் ஆண்டு வருமானம் வறுமைக் கோட்டுக்குள் இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தி அவர்கள் வறுமைக்கோட்டிற்கு வருவதற்கு தகுதியானவர்களா என்று உறுதிப்படுத்திய பிறகே உதவிகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியைச் சார்ந்த சுந்தர்ராஜன் மற்றும் தனம் தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். அதில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு வாய் பேச இயலாது. சுந்தரராஜன் கைவினை பொம்மை செய்து விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட பொது முடக்கம் காரணமாக இவர்களின் தொழில் முடங்கிப் போனதோடு வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்த சுந்தரராஜன் குடும்பம் அதிலிருந்து மீள்வதற்காக வங்கியில் கடன் பெற்று இருக்கிறார்கள். பெற்ற கடன் மூலமாக அவர்கள் தங்களுடைய குடும்பத்தையும் தொழிலையும் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில்தான் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பின் காரணமாக சுந்தர்ராஜன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில வாரங்கள் முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பொது முடக்கம் திருவிழாக்கள் நடைபெறாதது உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக செய்த பொம்மைகள் அனைத்தும் விற்பனையாகாமல் பொம்மை செய்யும் தொழில் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் குடும்பத்தின் தலைவராகவும் இருந்த சௌந்தரராஜன் உயிரிழந்தது குடும்பத்தினரை பெரிதும் பாதித்துள்ளது.
தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை கிடைத்தால் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் என்ற சுந்தர்ராஜனின் மனைவி தனம் முயற்சி செய்தபோது, அவர்களது குடும்பம் வறுமைக்கோட்டின் கீழ் பட்டியலில் இல்லை எனக் கூறி இவர்களுக்கு அரசு நிவாரணம் எதுவும் வழங்க வாய்ப்பில்லை என கூறியிருக்கின்றனர். பொம்மை தொழில் செய்வதற்காக சுந்தர்ராஜன் வங்கியில் கடன் பெற்று இருக்கும் காரணத்தினால் அவர் வறுமைக்கோட்டின் கீழ் வர மாட்டார் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இரண்டு மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு சுந்தரராஜனின் மனைவி தவித்து வருகிறார்.
எனவே தமிழகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் இந்த விதிமுறைகள் காரணமாக, பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளால் பயன்பெற முடியாத நிலை உள்ளது. எனவே, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி, பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் உதவ, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, கொரோனாவால் குடும்பத்தினரை இழந்தவர்களின் கோரிக்கையாக உள்ளது.