சென்னை எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இரண்டாவது குற்றவாளியான வீரேந்தர் ராவத், தனது வாக்குமூலத்தில் பல தகவல்களை தெரிவித்துள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளையன் வீரேந்தர் ராவத் போலீசாரிடம் தெரிவித்த வாக்குமூலத்தில், ‘’தான் பைக் ஓட்டுவதற்காகவே சென்னை வந்ததாகவும், பைக் ஓட்டிச்சென்றால் ரூ.1 லட்சம் பணம் தருவதாக அமீர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை வந்ததும் அமீர் பல லட்சங்களை கொள்ளையடித்ததை பார்த்ததும் தனக்கு கூடுதலாக பணம் வேண்டுமென அமீரிடம் கேட்டதாகவும் வீரேந்திரர் ராவத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் கொள்ளையடித்த பணம் வேறு எங்கேனும் வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு விவரம்:
சென்னையில் செனாய் நகர், வடபழனி, பெரம்பூர், ராமாபுரம், பெரியமேடு, கீழ்ப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட 18 இடங்களில் உள்ள எஸ்பிஐ ஏ.டி.எம்-க்களில் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். கொள்ளையர்களை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஹரியானா மாநிலத்தில் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார், உள்ளூர் காவல்துறை உதவியுடன் 3பேரை அதிரடியாக கைது செய்தனர். இதுவரை, சென்னையில் இருந்து மட்டும் 16 புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், அதில் முறையான ஆவணங்களை கொடுத்த 7 புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஓகேஐ என்ற ஜப்பான் நிறுவனம் தயாரித்த ஏடி.எம் இயந்திரத்தில் உள்ள லூப்ஹோல்களை கொள்ளையர்கள் பயன்படுத்தியுள்ளனர். பொதுவாக, செனாய் நகரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் தினசரி பணம் நிரப்புவது வழக்கம். சில தினங்களுக்கு முன்பு ஏடிஎம்-ல் இருந்து பணம் குறைந்துள்ளது. ஆனால், பணம் எடுத்ததற்கான பரிவர்த்தனை குறித்த விவரங்கள் பதிவாகவில்லை. அங்குள்ள சிசிடிவி கேமராவில், இரண்டு நபர்கள் பணம் எடுத்த காட்சியும் பதிவாகியிருந்தது. இதனையடுத்து, வங்கி அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் மனுவை அளித்தனர். இதுகுறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பொதுவாக, ஏ.டி.எம் இயந்திரத்தில் பாஸ்வேர்டை டைப் செய்தால், நாம் பதிவிட்ட பணம் வெளியே வரும். ஆனால் 20 நொடிக்குள், அப்பணத்தை எடுக்கவில்லையென்றால், பணம் மீண்டும் உள்ளே சென்றுவிடும். பணம் அக்கவுண்டில் இருந்து சென்றுவிட்டதா? அல்லது ஏடிஎம்க்குள் வந்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள ஏடிஎம் மெஷினில் ஒரு சென்சார் இருக்கும். இதனை தெளிவாக தெரிந்துகொண்ட கும்பல் பணத்தை எடுத்துவிட்டு சென்சாரையும் மறைத்திருக்கின்றனர். இதனால் பணம் மீண்டும் அக்கவுண்டில் வந்துவிட்டது என ஏடிஎம் நினைத்துக்கொள்ளும். அக்கவுண்டில் இருந்து பணம் குறையாது. ஆனால் ஏடிஎம்மில் இருந்து அந்தக் கும்பல் பணத்தை எடுத்துச்செல்லும். கொள்ளையடித்தவர்கள் போலியான முகவரியை வைத்து வங்கிக்கணக்கு தொடங்கி இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் எஸ்.பி.ஐ டெபாசிட் ஏடி.எம் மிஷினில் பணம் எடுப்பதற்கு எஸ்.பி.ஐ தடை விதித்தது. முதற்கட்ட விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வெளிமாநிலத்தவர்கள் என்றும், கொள்ளையடித்துவிட்டு ஹரியானாவில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து தனிப்படைபோலீசார் ஹரியானா விரைந்து மூவரை கைது செய்தனர்.