முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான அதிமுக ஆட்சியின்போது செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துறையில் பணியாளர்களை பணியமர்த்த, அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மோசடி செய்யப்பட்டதாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு அமலாக்கத்துறை தரப்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாத நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு வருகிறது. மேலும் 8 மாத காலம் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து வந்த நிலையில் கடந்த மாதம் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் மாநில போலீசார் தொடர்ந்துள்ள மோசடி வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25 க்குள் பதிலளிக்கும்படி அமலாக்க துறைக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு உத்தரவு பிறபித்துள்ளனர்.
அமலாக்க துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அப்போது, மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்க துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது என செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், அமலாக்க துறை வழக்கை விசாரணைக்கு அனுமதிக்கும் பட்சத்தில் மோசடி வழக்கில் விடுவிக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும் எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.