மத்திய அரசின் எந்த திட்டங்களை நாங்கள் தடுத்தோம் என பிரதமர் மோடி விளக்கட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


பொள்ளாச்சியில் முடிவுற்ற பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் பல நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 


இந்த நிகழ்ச்சியில் கடந்த 3 ஆண்டுகால சாதனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடந்த தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ள தெம்போடு வந்து பேசுகிறேன். என்னற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மக்களிடம் மகிழ்ச்சியை காணும் போது எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. கலைஞர் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். மக்களின் கருத்துகளை, கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கும் முதலமைச்சராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 


இதுபோக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 13 புதிய அறிவிப்புகளும், ஈரோட்டில் 9 புதிய அறிவிப்புகளும் நீலகிரியில் 4 புதிய அறிவிப்புகளும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். 


தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்த போது பேசிய கருத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து வசை பாடினார். 


அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டுக்கு வரும் திட்டங்களை மாநில அரசு தடுப்பதாக பொய் சொல்லுகிறார். மத்திய அரசு கொண்டு வந்த எந்த திட்டங்களை மாநில அரசு தடுத்தது? அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, இது மோடி புளுகு. 


எய்ம்ஸ் கொண்டு வருவதாக சொன்னார்கள். மறைந்த அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது ஜெயலலிதா அதை தடுத்தார்களா? இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏதேனும் திட்டங்களை கொண்டு வர விடாமல் தடுத்தோமா?  இல்லை. மக்கள் ஏதேனும் திட்டம் வேண்டாம் என தடுத்தார்களா? இல்லை” என கடுமையாக விமர்சித்தார்.