தமிழ்நாடு முழுவதும் உள்ள 55,000 இ -சேவை மையங்களில் பழகுநர் உரிம பதிவேடுகள் (எல்.எல்.ஆர்) சேவை கட்டணத்தை ரூ. 60க்கு தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
55, 000க்கு மேற்பட்ட இ-சேவை மையங்கள் மூலம் எல்.எல்.ஆர் விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. வாகனம் ஓட்ட பழகுநர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் கூடுதலாக ரூ. 60 கட்டணம் செலுத்த வேண்டும். எல்.எல்.ஆர் பெற பயிற்சிப்பள்ளி, இடைத்தரகர்களை மக்கள் அணுகுவதில் உள்ள சிரமத்தை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் எல்.எல்.ஆர், டிரைவிங் ஸ்கூல் மற்றும் டாக்குமெண்ட்டை பெறுவதற்கு அதிக கட்டணத்தை செலுத்துவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த இ-சேவை மையங்களில் அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமங்களையும் வாங்கலாம் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.எல்.ஆர் பெற இனி இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தற்போது எல்.எல்.ஆர் பெற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் இணையதள மையங்களையும் பொதுமக்கள் அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன்மூலம், தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்பட்டது. மேலும், இதில் எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் உள்ளது.
அத்துடன் இந்த சேவைகளை பெறுவதற்கு பொதுமக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்ப்பதற்கும், இதுகுறித்து எந்தவித புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில், இதனை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது” என தெரிவித்தார்.