ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவுமுதல் #I_Standwith_PTR என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வந்தது. அது ஏன்? என்ன காரணம் என்பதை இங்கு பார்க்கலாம்.


கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு சார்பில் சட்டபேரவையில் இந்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 


இந்த அறிவிப்பை தொடர்ந்து பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் இதுகுறித்தான மீம்ஸ்களும் இணையத்தை கலக்க தொடங்கின. ஒரு சில மீம்ஸ்கள் நகைச்சுவையாகவும், கடுமையாக விமர்சனம் செய்யும்படியாகவும் இருந்தது. அதிலும், குறிப்பாக சவுக்கு சங்கருக்கு ஆதரவான ட்விட்டர் பக்கம் ஒன்றில் நிதியுதவி பெறும் பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பது போல் காமெடி நடிகர்களான கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரின் புகைப்படத்தை வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் எழுதி பதிவிடப்பட்டு இருந்தது.  


இதையடுத்து, voice of savukku என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அட்மின் பிரதீப்பை நேற்று முன் தினம் இரவு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “  முதலமைச்சர் முக ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் காவல்துறையினர் மூலம் வாய்ஸ் ஆப் சவுக்கு பக்கத்தின் அட்மினை கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர். இதுபோன்ற பற்றாகுறை பட்ஜெட் யாரும் விமர்சிக்க கூடாது என அவர் நினைக்கிறார். இந்த அரசை நினைத்து வெட்கப்படுகிறேன்” என பதிவிட்டார். 



இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “இந்த கற்பனைவாதியின் சித்தப்பிரமையை நான் புறக்கணித்துவிட்டேன், ஆனால் இது 100% பைத்தியக்காரத்தனம் என்பதால் இதற்கு பதிலளிக்கிறேன். 


 இந்தக் ட்விட்டர் பக்கம் இருப்பது எனக்குத் தெரியாது, அதனால் வீடியோவையும் பார்க்கவில்லை. இதுகுறித்து புகாரும் செய்யவில்லை


 இடைநீக்கம் செய்யப்பட்ட டி.வி.ஏ.சி எழுத்தாளரால் (சவுக்கு சங்கர்) மாநில பட்ஜெட் மீதான "விமர்சனம்" என்னைத் தொந்தரவு செய்யத் தொடங்கும் போது நான் பொது வாழ்க்கையை விட்டுவிடுகிறேன்.” என பதிவிட்டார். 




இதையடுத்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவளிக்கும் வகையில் #I_Standwith_PTR என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.