உக்ரைனில் உள்ள 5000 மாணவர்கள் தமிழகம்  திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இன்று காலை மட்டும் தமிழக மாணவர்கள் 916 பேர், தமிழக அரசை தொடர்புகொண்டுள்ளனர். 


உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது. 


இந்தநிலையில், உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்க அதிகாரிகளை நியமனம் செய்தது வெளியுறவுத்துறை அமைச்சகம். உக்ரைன் எல்லை நாடுகளான ஹங்கேரி,போலந்து மூலம் இந்தியர்களை மீட்க ஏற்பாடு செய்து வருகிறது. மேலும், 200க்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்தது. 




இந்த நிலையில், உக்ரைன் பல்கலைக்கழகத்தின் அடித்தளத்தில்  இந்திய மாணவர்கள் மறைந்திருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை இம்ரான் சோலங்கி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தின் அடித்தளத்தில் இந்திய மாணவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.


உணவு, பணம், அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்து போவதால் அவர்கள் கவலையடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், பாரத பிரதமர் மோடி அவர்களே, 18000 இந்தியர்களில் பலர் மாணவர்கள், இன்னும் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும்  பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் வீடியோக்களும், அதிரும் கட்டிடங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரஷ்ய படையெடுப்பில் இதுவரை 10 இராணுவ அதிகாரிகள் உட்பட 137 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். 


நேற்றைய தாக்குதலை தொடர்ந்து தற்போது ரஷ்யா, உக்ரைனில் 2வது நாள் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண