தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முதன்முறையாக சட்டப்பேரைவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்கியது.


சட்டப்பேரவை மரபுப்படி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக ஆளுநர் மாளிகையில் இருந்து கலைவாணர் அரங்கம் வந்தார். அவருக்கு பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் பேரவைச் செயலாளர் வரவேற்பு அளித்தனர். பின்னர், அவர் கூட்டத்தொடர் நடைபெறும் பேரவைக்கு வருகை புரிந்தார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார், அவர்களும் வணக்கம் தெரிவித்தனர்.


பின்னர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழில் காலை வணக்கம் என்று தனது உரையைத் தொடங்கினார். மேலும், எளிமையாக வாழுங்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுரை கூறினார். பின்னர். இந்த கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆங்கிலத்தில் பேசியதாவது,


“சமூக நீதி, ஆண் பெண் சமத்துவம், பொருளாதார நீதி ஆகிய கொள்கைளை அடித்தளமாக கொண்டது எங்கள் அரசு. அரசின் ஒவ்வொரு செயலும், சட்டமும், திட்டமும், முயற்சியியும் இந்த கொள்கைகளை கொண்டிருக்கும். தனக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எந்தவித பாரபட்சமுமின்றி அனைத்து மக்களுக்கான அரசாக செயல்படும்.




உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப ஒன்றிய அரசுடன் நல்லுறவு பேணுவோம். தமிழ்மொழியை தொடர்ந்து இந்திய அலுவல் மொழியாக்க தமிழக அரசு வலியுறுத்தும். மாநிலங்களுக்கான சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது.


கருணாநிதி சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள் அரும்பணியாற்றிய ஓர் ஒப்பற்ற தலைவராக திகழ்ந்தார்.கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் மீண்டும் அமைக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசுக்கு தேவைப்படும் உதவிகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் முன்வைத்துள்ளார். ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.




தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் தடுப்பூசியின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கருணாநிதி இல்லையென்றாலும் அவரது கொள்கைகள் இந்த அரசை வழிநடத்திச் செல்லும். ஒன்றிய அரசுடன் இந்த அரசு நல்லுறவைப் பேணும்.”


இவ்வாறு அவர் பேசினார். மேலும், தனது உரையை முடிக்கும்போது தமிழில் நன்றி, வணக்கம் என்று கூறி நிறைவு செய்தார். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு கலைவாணர் அரங்கிலும், சேப்பாக்கம் செல்லும் சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பேரவை கூட்டத்தில் பங்கேற்கும் பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் அனைவருக்கும் ஏற்கனவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுது என்பது குறிப்பிடத்தக்கது.