தமிழகத்திலேயே முதல்முறை பெண் ஒருவராக நியமனம் செய்யப்பட்டவர் மீண்டும் ஓதுவார் பணி கேட்டு முதல் அமைச்சருக்கு வேண்டுகோள்.


திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் தமிழகத்திலேயே முதல் முறையாக முதல் ஆதி திராவிட சமூகத்தை சேர்ந்த பெண் ஓதுவாராக அங்கயற்கண்ணி என்பவர் பணி நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2013ஆம் ஆண்டு வரை மாதம் 1500 ரூபாய் ஊதியத்தில் அங்கயற்கண்ணி பணியாற்றி வந்தார். மேலும் குறைந்த ஊதியம் என்பதால் வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்கு பணம் போதவில்லை என்ற காரணத்தினால் அங்கயற்கண்ணி தனது பணியைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் சக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டபோது, தனக்கு மட்டும் ஊதிய உயர்வு மறுக்கப்பட்டதன் காரணத்தினால் பலமுறை ஊதிய உயர்வு கேட்டு அங்கயற்கண்ணி முயற்சித்து வந்தார். பல முயற்சிகளுக்குப் பிறகும் அங்கயற்கண்ணி ஊதிய உயர்வு கிடைக்கவில்லை.




ஆதிதிராவிட முதல் பெண் ஓதுவராக தமிழகமே திரும்பிப் பார்த்த வியத்தகு பெண்ணாக இருந்த அங்கயற்கண்ணி, தற்போது வேலை இழந்து நிற்கிறார். 2010 ஆம் ஆண்டு அவருக்கு திருமணமான நிலையில் 2011இல் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், குடும்ப சூழ்நிலையாலும் பணிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர், திருச்சியில் இருந்து நாமக்கல் சென்றதால் கோயிலில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளித்த அழைப்பு கடிதமும் கிடைக்கப் பெறாமல் போனதால் 2013 முதல் 2016 வரை பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோரை நேரடியாக சந்தித்து மனு அளித்ததுடன் தனக்கு மீண்டும் பணி வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு ஓதுவார் பணி வழங்காமல் அன்னதான உதவியாளராக பணி வழங்கப்பட்டது. இதையடுத்து அவரை மீண்டும் பணியமர்த்தியது செல்லாது என புதிதாக நியமிக்கப்பட்ட கோயில் அலுவலர் தெரிவித்துள்ளார்.




எனவே அவரால் ஒருவர் பணியை தொடர்ந்து செய்ய முடியவில்லை. இதனால் வீட்டிலேயே குழந்தைகளுக்கு பாட்டு கற்றுக் கொடுப்பது மற்றும் மன நிம்மதிக்காக வீட்டிலேயே கடவுள் முன் பாடிக் கொண்டிருப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதலே மீண்டும் ஓதுவார் பணியை தனக்கு வழங்கக்கோரி அங்கயற்கண்ணி கோரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில், தமிழக அரசு அனைத்து ஜாதியினருக்கும் ஓதுவார் பணிக்காக பணிநியமன ஆணைகள் வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அங்கயற்கண்ணி தெரிவித்தார்.


இந்த நிலையில் தனக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று அங்கயற்கண்ணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரசு இசைப்பள்ளியில் பயிற்சி முடித்தவர்களுக்கு வயது வரம்பைத் தளர்த்தி அரசு பணி நியமன ஆணைகள் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.