கோவை தெற்கு சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் வானதி இன்று சட்டப்பேரவையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அதில்,’கன்னிப்பேச்சு என்னும் சொல்லை முதல் பேச்சு எனக் குறிப்பிடுவது, ஒன்றிய அரசு சொல்லாடல் எனப் பலவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார். 


’முதல்முறை சட்டப்பேரவையில் பேசும் உறுப்பினர்களின் உரையை கன்னிப்பேச்சு எனச் சொல்லாமல் முதல் பேச்சு அல்லது அறிமுகப்பேச்சு எனக் கூறினால் நாகரிகமாக இருக்கும்’ என பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று முதன்முதலாக அவர் தனது அறிமுக உரையை நிகழ்த்த இருந்த நிலையில் அவர் இதனைக் கூறினார்.
மேலும் அவர், ‘கன்னி என்கிற சொல் இளம் வயது பெண்ணைக் குறிக்கும் வார்த்தை. என்னைப் பொருத்தவரை அறிமுகப்பேச்சு எனக் குறிப்பிட்டால் அது நாகரிகமாக இருக்கும்’ என்றார். 


வானதியின் இந்தக் கருத்துக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, வானதியின் பேச்சு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் எனத் பதிலளித்தார்.மேலும் தொடர்ந்த எம்.எல்.ஏ., வானதி, ’சபாநாயகரே! நீங்கள் நானும் எத்தனையோ தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று விவாதித்துள்ளோம்’ என்றார். 




அதற்கு மறுபடியும் பதிலளித்த சபாநாயகர், ’ஆம்! ஆம்!நிச்சயமாக, உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை முறைப்படி சட்டப்பேரவையில் கொடுக்கப்படும் ’ என்றார். 


இதையடுத்துத் தனது உரையைத் தொடங்கிய வானதி சீனிவாசன், ’ரோஜாவுக்கு எந்த பெயர் வைத்து அழைத்தாலும் அதன் வாசத்தை மாற்ற முடியாது.அதே போல மத்திய அரசுக்கு எந்த பெயர் வைத்து அழைத்தாலும் அதன் அதிகாரத்தை குறைக்க முடியாது.சமூகநீதிக்கு பிரதமர் மோடி ஒரு உதாரணம்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர்’ எனத் தமிழ்நாடு அரசின் ’ஒன்றிய அரசு’ பெயர் வழக்கத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.


முன்னதாக, சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்றைய விவாதத்தில் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதுகுறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், கோடநாடு வழக்கு விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்படி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கோடநாடு தொடர்பாக என்ன நோக்கத்திற்காக விசாரணை நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரின் அறிவிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை எனவும் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பதிலளித்தார். முதல்வரின் பேச்சுக்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.