திருமணத்தை மீறிய உறவு:


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தொட்டிக்குடிசை கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 45). இவருடைய மனைவி சிவகலா (38). இந்த தம்பதிக்கு சிவரஞ்சனி (19) என்ற மகளும், சிலம்பரசன் (17) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை காட்டுப்பாக்கம் வாடகை வீட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.


சென்னை குமணன்சாவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரவீந்திரன் வேன் டிரைவராக உள்ளார். இதனால் ரவீந்திரனுக்கும், அதே பள்ளியில்  உதவியாளராக பணியாற்றும் மாங்காட்டை சேர்ந்த முகிலா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.


மர்ம மரணம்:


இந்த விவகாரம் தெரிந்ததும், சிவகலா தனது கணவரை கண்டித்துள்ளார். ஆனால் அவரோ கள்ளக்காதலை கைவிடவில்லை. மாறாக மது குடித்து விட்டு சிவகலாவை அவர், அடித்து துன்புறுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி காலையில் வழக்கம் போல் சிவரஞ்சனி கல்லூரிக்கு சென்று விட்டார். சிலம்பரசன் வேலைக்கு சென்று விட்டார். அதன்பிறகு ரவீந்திரனுக்கும், சிவகலாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மாலை கல்லூரி முடிந்ததும் சிவரஞ்சனி வீட்டுக்கு வந்து பார்த்த போது, சிவகலா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அருகில் மது போதையில் இருந்த ரவீந்திரன், உடல் நிலை சரியில்லாமல் சிவகலா தூக்குப் போட்டு தற்கொலை செய்து விட்டதாக கூறினார்.


இதையடுத்து அவரது உடலை தொட்டிக் குடிசை கிராமத்துக்கு கொண்டு வந்து, உடல்நிலை சரி இல்லாமல் இறந்து விட்டதாக கிராம மக்களையும் நம்பவைத்து காவல்துறைக்கு தெரியாமல் சுடுகாட்டில் குழிதோண்டி புதைத்தனர். இதையடுத்து மகள், மகனை தொட்டிக்குடிசை கிராமத்தில் விட்டுவிட்டு, ரவீந்திரன் மட்டும் சென்னைக்கு சென்றார். இந்த நிலையில் சிவரஞ்சனி தனது தாயின் செல்போனை பார்த்தார். அதில் கடைசியாக அவரது தந்தை வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஆடியோ இருந்தது. அதில், கள்ளக்காதலிக்காக ரவீந்திரன் சிவகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவரஞ்சனி, கடந்த 14-ந்தேதி தனது தாய் சாவில் சந்தேகம் இருப்பதாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


தற்கொலையா..? கொலையா..?


புகாரின் பேரில் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிவகலாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்தனர். இது தொடர்பாக பூந்தமல்லி போலீசார், திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கரதாசுக்கு கடிதம் அனுப்பினர். மேலும் போலீசார் நேற்று தொட்டிக்குடிசை கிராமத்துக்கு நேரில் வந்தனர். அங்கு திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ் முன்னிலையில் சிவகலாவின் உடல் தோண்டி வெளியே எடுக்கப்பட்டது. அங்கேயே விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். தடய அறிவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். பின்னர் அதே இடத்தில் சிவகலாவின் உடல் புதைக்கப்பட்டது.


பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பிறகுதான் சிவகலா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றி தெரியவரும் என்று போலீசார் கூறினர். இதனிடையே மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ரவீந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.